பெற்ற மகளையே.. பாலியல் தொழிலில் தள்ளிய கொடூர தாய்! இதற்கு காவலர் ஒருவர் வேற உதவியாம்! மதுரையில் ஷாக்
மதுரை: மதுரையில் பெற்ற மகளையே காவலர் ஒருவரின் உதவியுடன் பெண் ஒருவர் விபச்சாரத்திற்குத் தள்ளிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை பகுதியில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய சோதனையில் விபச்சார கும்பலைப் பிடித்தனர்.
இதில் அதிர்ச்சி தகவல் என்னவென்றால் அங்குப் பெற்ற மகளையே பெண் ஒருவர் விபச்சாரத்திற்குத் தள்ளியுள்ளார். மேலும், இதற்குக் காவலர் ஒருவரே உதவியாகவும் இருந்துள்ளார்.

மதுரை
மதுரை மாநகர் கோ.புதூர் டி.ஆர்.ஒ. காலனி முனியாண்டி கோவில் தெருவில் உள்ள வீடு ஒன்றில் சில காலமாகவே பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில் விபசார தடுப்பு பிரிவு போலீஸ் விஜயலட்சுமி தலைமையில் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை செய்தனர். அதில் அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதியானது.

விசாரணை
அங்கு இருந்த பெண் உள்ளிட்ட 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து விசாரணை நடத்தினர். அதில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சுமதி என்பது தெரியவந்தது. மேலும், அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீஸ், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

ஏழைப் பெண்கள்
அப்போது சில அதிர்ச்சி தகவல்கள் போலீசாருக்கு தெரிய வந்தன. அதாவது குடும்ப வறுமையில் உள்ள ஏழைப் பெண்களை ஆசை வார்த்தை கூறி அழைத்து வரும் சுமதி, அங்கேயே வீடு ஒன்றை வாடகைக்குப் பிடித்துவிடுவாராம். பின்னர் அந்தப் பேண்களை பாலியல் தொழிலில் தள்ளிவிடுவதும் விசாரணையில் தெரிய வந்தது. இப்படிப் பல பெண்களைச் சுமதி பாலியல் தொழிலில் தள்ளியுள்ளாராம்.

காவலரே உதவி
மேலும், இவர்களது பாலியல் தொழிலுக்கு எந்தவித பாதிப்பும் வந்திராமல் இருக்க கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வரும் கண்ணனேந்தல் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன்(49) என்பவரும் இவர்களுக்கு உதவியாக இருந்து வந்துள்ளார். தப்பு நடப்பதைத் தடுக்க வேண்டிய போலீசாரே, பாதுகாப்பாக பாலியல் தொழில் நடத்த உதவியாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

புரோக்கர்
மேலும், செல்லூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் காசி (42) என்பவரும் இவர்களுக்கு உதவியாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அனைவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள் அனைவரையும் மீட்டு அரசுக் காப்பகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

பெற்ற மகள்
அவரிடம் நடத்தி விசாரணையில் சுமதி மற்றும் காவலர் தேவேந்திரன் இருவரும் கூட்டாக இணைந்தே இந்த பாலியல் தொழிலை நடத்தி வந்தது தெரிய வந்தது. இதற்கு புரோக்கராக ஆட்டோ ஓட்டுநர் காசி செயல்பட்டதும் போலீஸ் விசாரணையில் உறுதியானது. மேலும், மீட்கப்பட்ட பெண்களில் சுமதியின் மகளும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. காவலர் ஒருவரே விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications