நீங்கள் மட்டும் ஏன் உரிமையை கேட்கிறீர்கள் என்பதா? மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் கேள்வி!
மதுரை: மும்மொழிக் கொள்கையை பிறமாநிலங்கள் ஏற்கும் போது தமிழ்நாடு மட்டும் ஏற்க மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். நாங்கள் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து ஷூவை துடைத்துக்கொடுத்தோம். நீ மட்டும் இன்னும் ஏன் உரிமையை கேட்டுக் கொண்டுள்ளாய்? என்ற கேள்வியின் தொடர்ச்சி தான் இது என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடி நிதி குஜராத் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களுக்கு திருப்பிவிடப்பட்டதாக தமிழக அரசு குற்றம் சாட்டியது. பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால், மத்திய அரசு இந்த நிதியை கொடுக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சார் தர்மேந்திர பிரதான் பங்கேற்றார். அப்போது தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய நிதி நிறுத்தப்பட்டிருப்பது குறித்த கேள்வி எழுப்பப்பட்ட போது, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதி நிலுவையில் இருப்பது எனக்கும் தெரியும். அரசியல் காரணங்களுக்காக தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது.
மும்மொழிக் கொள்கையை மற்ற மாநிலங்கள் ஏற்கும் போது தமிழக அரசு மட்டும் ஏன் ஏற்க மறுக்கிறது? தேசிய கல்விக் கொள்கையில் தமிழை படிக்கக் கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை. தமிழக அரசு மட்டும் இருமொழி கொள்கை என்று மக்களை குழப்புகிறது. அரசியலைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
மத்திய அமைச்சரின் இந்த பேச்சு தமிழக அரசியலில் விவாதமாகி உள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தரப்பில் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வீரபாண்டிய கட்டபொம்மன் சம்பவத்தின் வழியாக எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
அதில், ஏனைய பாளையக்காரர்கள் எல்லாம் அடிபணிந்துவிட்டார்கள். நாங்களும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து ஷூவை துடைத்துக்கொடுத்தோம். நீ மட்டும் இன்னும் ஏன் உரிமையை கேட்டுக் கொண்டுள்ளாய்? என்ற கேள்வியின் தொடர்ச்சி தான் இது என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சோஷியல் மீடியாவில் பல்வேறு தரப்பினராலும் பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications