மதுரை உஷா மாந்திரீகத்தில் கில்லாடியாம்.. மடக்கி பிடித்த போலீஸ்! போலி ஆசாமியும் சிக்கினார்
மதுரை: மாந்திரீகம் செய்வதாக சொல்லி, மதுரையில் லட்சக்கணக்கில் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்தவர்களிடமிருந்து நகைகளையும் பணத்தையும் மீட்டிருக்கின்றனர்.
சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்தவர் அங்கயற்கண்ணி. இவர் கொஞ்ச நாட்களுக்கு முன்னர் மதுரை வழியாக பேருந்தில் திருச்செந்தூருக்கு சென்றிருக்கிறார். அப்போது பேருந்தில் வைத்து உஷா என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

பார்த்த மாத்திரத்திலேயே, முகத்தில் இருக்கும் ரேகையை வைத்து வாழ்க்கையை கணித்துவிடும் அடேங்கப்பா திறமையுடன் தான் பிறந்திருப்பதாகவும், உங்கள் முகத்தை பார்க்கும்போது, வாழ்க்கையில் ரொம்பவும் அடிவாங்கியிருப்பீர்கள் போல.. என்று அளந்து விட்டிருக்கிறார் உஷா. இதைக்கேட்டு ஆடிப்போன அங்கையற்கண்ணி, ஒன்றா, இரண்டா! சொல்வதற்கு ஆயிரம் பிரச்சனைகள் இருக்கிறது என்று சோக கதையை பாட, அப்போதைக்கு ஆறுதல் சொல்லிவிட்டு ரூ.201 தட்சணை மற்றும் மொபைல் நம்பர் வாங்கிக்கொண்டு, இறங்கியிருக்கிறார் உஷா.
கொஞ்ச நாட்கள் கழித்து அங்கயற்கண்ணிக்கு போன் செய்த உஷா, "உங்களுடைய கஷ்டங்களையெல்லாம் நான் எனது குருவிடம் சொல்லிவிட்டேன். அவர் உங்களுக்காக பூஜை செய்வதாக கூறியிருக்கிறார். அது மட்டும் செய்தால், வீட்டில் உள்ள பிரச்சனைகள், சர்ப் எக்ஸல் சோப்பு நுரை மாதிரி காற்றோடு காற்றாக கரைந்துவிடும். ஆனால் என்ன, பூஜை செலவுகளுக்குதான் என்னிடம் காசு இல்லை" என்று இழுத்திருக்கிறார்.
பதிலுக்கு, அங்கையற்கண்ணி.. "காசுதானே! நான் தரேன். என் பிரச்சனை மட்டும் சரியானால் போதும்" என்று கூறி, ஜிபே மூலம் பணம் அனுப்பியுள்ளார். அப்புறம் என்ன அமாவாசைக்கு ஒன்னு, பௌர்ணமிக்கு ஒன்னு என மாதத்திற்கு இரண்டு பூஜைகளை சகட்டு மேனிக்கு செய்து தள்ளி.. வசூல் வேட்டை நடத்தியிருக்கிறார் உஷார்.
இடையிடையில் பணம் கொடுக்க, அங்கையற்கண்ணி தயக்கம் காட்ட, வசூல் வேட்டையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார் உஷா. அதாவது, "வீட்டுக்கு அடியில் வராஹி அம்மன் சிலை இருக்கிறது. அதன் மேல் நீங்கள் நடப்பதால்தான் இந்த பிரச்சனையெல்லாம் ஏற்படுகிறது. சிலையை எடுக்காமல் விட்டால் அது நிச்சயம் உயிரை பறித்துவிடும்" என்று கூற, அங்கயற்கண்ணியோ அச்சமடைந்து, இதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
சிலை அகற்ற வேண்டும். எனது குரு தலைமை பூசாரிதான் இதை செய்வார். இதற்கு ரூ.15 லட்சம் செலவாகும் என்று கூறிய உஷா, இன்ஸ்டால்மென்டில் சில லட்சங்களையும், காசு இல்லாதபோது நகைகளையும் வாங்கியுள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்த பணமெல்லாம் காணாமல் போயுள்ளதை அறிந்துக்கொண்ட அங்கயற்கண்ணியின் மகள், விசாரிக்க உண்மை வெளி வந்திருக்கிறது. எனவே மேற்படியான் பூசாரி மீதும், அவரை வைத்து பணத்தை சுருட்டிய உஷா மீதும் மதுரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், ஏமாற்று கும்பலை பிடிக்க தனி திட்டம் தீட்டியுள்ளனர். அடுத்த முறை உஷா அழைக்கும்போது பணத்தை நேரில் வந்து தருகிறேன் என்று சொல்லி பேசுமாறு அங்கயற்கண்ணிக்கு போலீசார் ஐடியா கொடுத்திருக்கின்றனர். எதிர்பார்த்தபடி இரண்டு நாட்களில் உஷாவிடமிருந்து போன் வந்திருக்கிறது.
பணம் ஏற்பாடு செய்யப்பட்டதா? என கேட்க.. இப்போதைக்கு ரூ.2 லட்சம்தான் இருக்கிறது என்றும், அதை மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் வந்து வாங்கிக்கொள்ள வேண்டும் எனவும் அங்கயற்கண்ணி போலீஸ் சொல்லிக்கொடுத்ததை போல பேசிருக்கிறார்.
திட்டத்தின்படி உஷா மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு வரவழைக்கப்பட்ட உஷா கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரை வைத்து மானாமதுரையில் பதுங்கியிருந்த அவரது குரு என்று சொல்லப்படும் மேற்படியான் பூசாரியையும் போலீசார் கைது செய்திருக்கின்றனர். அவர்களிடமிருந்து சில லட்சம் பணத்தையும், நகையையும் போலீசார் மீட்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications