தகாத உறவு தலையை வாங்கியது.. மதுரையை உலுக்கிய "மச்சான்" கொலை!
மதுரை: தங்கை தற்கொலை செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த அண்ணன், அதற்கு காரணமாக இருந்த தனது மைத்துனரை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் ஈச்சனேரியைச் சேர்ந்தவர் காளிதாஸ் (32). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பனிதா என்ற பெண்ணுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணமான சில மாதங்களிலேயே தனது கணவர் காளிதாஸுக்கு சில பெண்களுடன் பழக்கம் இருந்தது பனிதாவுக்கு தெரியவந்தது. இந்த பழக்கத்தை கைவிட்டு விடுமாறு கணவனிடம் பனிதா பல முறை கெஞ்சியுள்ளார். ஆனால் பெண்கள் சகவாசத்தை காளிதாஸ் விடவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கணவன் - மனைவிக்குள் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

பெண் சகவாசம்
இதையடுத்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பனிதா தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். காளிதாஸ் எத்தனை முறை நேரில் சென்று கூப்பிட்டு பார்த்தும் பனிதா வரவில்லை. தொடர்ந்து, ஊர் பெரியவர்களும், உறவினர்களும் பஞ்சாயத்து செய்து பனிதாவை கணவன் காளிதாஸுடன் அனுப்பி வைத்தனர். காளிதாஸும் இனி மற்ற பெண்களுடன் பழகுவதில்லை என உறுதி அளித்திருக்கிறார்.

தகாத உறவு
பின்னர் சில மாதங்கள் காளிதாஸ் எந்தப் பெண்களுடனும் பேசாமல் இருந்து வந்துள்ளார். கணவனும், மனைவியும் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். ஆனால் இது சிறிது நாட்கள்தான் இந்த மகிழ்ச்சி நீடித்தது. மீண்டும் காளிதாஸ் மற்ற பெண்களுடன் தகாத உறவில் ஈடுபட தொடங்கினார். இதனால் விரக்தி அடைந்த பனிதா, கடந்த வாரம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது, பனிதாவின் குடும்பத்தினருக்கு காளிதாஸ் மீது கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. பனிதாவின் இறுதிச் சடங்கின் போதே பனிதாவின் அண்ணன் முத்துப்பாண்டி (27) உள்ளிட்டோருக்கும், காளிதாஸுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

அண்ணன் கடும் ஆத்திரம்
இந்நிலையில், காளிதாஸை தீர்த்துக்கட்ட பனிதாவின் அண்ணன் முத்துப்பாண்டி தனது நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் தீட்டினார். அதன்படி நேற்று முன்தினம் காளிதாஸை செல்போனில் தொடர்பு கொண்ட முத்துப்பாண்டி, அவரிடம் சமாதானம் பேசியுள்ளார். பின்னர் ஈச்சேனேரியில் உள்ள மைதானத்துக்கு மது அருந்த வருமாறு முத்துப்பாண்டி கூறியுள்ளார். இதனை நம்பி காளிதாஸும் அங்கும் சென்றுள்ளார். அப்போது முத்துப்பாண்டி தனது நண்பர்கள் 3 பேருடன் அங்கு வந்துள்ளார். பின்னர் அவர்கள் மது அருந்தியுள்ளனர். காளிதாஸுக்கு அவர்கள் அளவுக்கு அதிகமாக மது ஊற்றி குடித்துள்ளனர். இதில் போதை அதிகமான காளிதாஸை முத்துப்பாண்டியும், அவரது நண்பர்களும் சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பினர்.

கைது நடவடிக்கை
இதனிடையே, நேற்று காலை மைதானத்தில் காளிதாஸின் சடலத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் அங்கு வந்து காளிதாஸின் உடலை கைப்பற்றி பிரதேப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது செல்போனை ஆய்வு செய்த போது முத்துபாண்டி உள்ளிட்டோர் தான் இந்தக் கொலையை அரங்கேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து முத்துப்பாண்டி மற்றும் அவரது நண்பர்களை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications