மதுரைக்கு மட்டும் பட்ஜெட்டில் 20 அறிவிப்புகள்.. பட்டியல் போட்டு வரவேற்ற சு.வெங்கடேசன் எம்.பி!
மதுரை: அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் பரவலாக கவனம் பெற்று வருகின்றன. இந்நிலையில், மதுரைக்கு என 20 அறிவிப்புகள் வெளியாகியுள்ளதாக கூறி பட்ஜெட்டுக்கு சு.வெங்கடேசன் எம்பி வரவேற்பு தெரிவித்திருக்கிறார்.
நடப்பாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 12ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் இன்று பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். எதிர் வரும் லோக்சபா தேர்தல், கடந்த ஆண்டு ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்பு, மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதி சர்ச்சை, மாநிலத்திற்கான வரி பகிர்வு போன்ற சலசலப்புகளுக்கு நடுவே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

அதேபோல பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் பெரும் கவனம் ஈர்த்தது. குறிப்பாக, கூடுதலாக 500 மின்சார பேருந்துகள் உட்பட 3000 அரசு பேருந்துகள் வாங்கப்படும், வானிலையை துல்லியமாக கணித்து மழை வெள்ளம் பாதிப்புகளை சரி செய்ய கூடுதலாக 2 டாப்ளர் ரேடார்கள் அமைக்கப்படும், அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும். ஜூன் மாதத்துக்குள் 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும் போன்ற அறிவிப்புகள் போன்ற அறிவிப்புகள் பரவலாக கவனம் பெற்றிருக்கின்றன.
இந்நிலையில் இந்த பட்ஜெட்டில் மதுரைக்கென 20 அறிவிப்புகள் வெளியாகியுள்ளதாகவும், எனவே பட்ஜெட்டுக்கு வரவேற்பளிப்பதாகவும் சு.வெங்கடேசன் எம்பி கூறியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மதுரைக்கான அறிவிப்புகளை பட்டியலிட்டுள்ளார்.
"மதுரையில் 26,500 சதுர அடியில் தொழில் புத்தாக்க மையம் அமைக்க 24 கோடி ரூபாய் ஒதுக்கீடு
கோவை, மதுரையில் உலகளாவிய திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்.
மதுரை மாவட்டத்திலுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தின் மூலம்
சக்கிமங்கலம் தொழிற்பேட்டையில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் மூன்று அடுக்குகள் கொண்ட அடுக்குமாடித் தொழில் வளாகம் 118 கோடியில் கட்டப்படும்.இதன் மூலம் 4500 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர், கோவை, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் ஒருங்கிணைந்த சுற்றுலாத் தல மேம்பாட்டுத் திட்டம்.
மதுரையில் திருமங்கலம் மற்றும் ஒத்தக்கடை பகுதிகளை இணைத்திடும் வகையில் 11,368 கோடி ரூபாய் மதிப்பீடில் மெட்ரோ ரயில் திட்டம் ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் அதற்கான பணிகள் துவங்கும்.
தங்கி பணி பணிபுரியும் பெண்களுக்கான தோழி விடுதிகள் மதுரை, சென்னை, கோவை ஆகிய இடங்களில் நவீன வசதிகளுடன் கட்ட 26 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
சென்னை, கோவை, மதுரை சேலம், திருச்சியில் பொது இடங்களில் இலவச வைஃபை வசதி அமைக்கப்படும்.
தமிழ்நாட்டில் பேசப்பட்டும் சௌராஷ்டிரா மற்றும் பழங்குடியின மொழிகளை இனவரைவியல் நோக்கில் ஆவணப்படுத்த 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
தமிழ்நாட்டிற்குள் கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட 8 இடங்களிலும், தமிழ்நாட்டிற்கு வெளியில் தமிழ் சமூகம் வாழ்ந்த 4 இடங்களிலும் அகழாய்வு மேற்கொள்ள 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
நவீன மரபணுவியல் தொழில்நுட்பங்களைக் கொண்டு தமிழ் மக்களின் மரபணுத் தொன்மை, இடப்பெயர்வு, வேளாண்மை, பண்பாட்டு நடைமுறைகள் மற்றும் உணவு
பழக்கவழக்கங்களைக் கண்டறிய மதுரை காமராசர் பல்கலைக்கழக மரபியல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொல்மரபணுவியல் ஆய்வகம் மூலம் தொல்மரபியல் ஆராய்ச்சியை மேற்கொள்ள 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
வைகை, காவிரி, தாமிரபரணி மற்றும் நொய்யல் ஆகிய நதிகளை ஒட்டிய பகுதிகள் சீரமைக்கப்பட்டு நதிநீரை தூய்மையாகப் பராமரிக்கவும், நதிக்கரைகளில் பசுமைப் பூங்காங்கள் அமைக்கவும், திறந்தவெளி அரங்கம் அமைக்கவும் மதுரை, திருச்சி, திருநெல்வேலி, ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் நதிகள் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டப் பணிகளை மேற்கொள்ள விரிவான ஆய்வு பணிகள் & திட்ட அறிக்கை தயாரிக்க 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் பசுமைப் பரப்பை அதிகரிக்க "நகர்ப்புற பசுமைத் திட்டம் "
மதுரை மற்றும் சேலம் மாநகராட்சிகளில் 2024 2025 ஆம் நிதியாண்டில் 24 மணி நேர தடையற்ற குடிநீர் திட்டம்.
கீழடியில் திறந்தவெளி அரங்கு ரூ.17 கோடி செலவில் அமைக்கப்படும்.
சென்னை, மதுரை, கோவையில் ரயில்வே, வங்கி தேர்வுகளுக்கு உண்டு உறைவிட வசதிகளோடு 6 மாத பயிற்சி அளிக்க ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு.
விளையாட்டு போட்டிகளின் தலைமையகமாக தமிழ்நாட்டை மாற்றிட மதுரை, சென்னை, திருச்சி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஒலிம்பிக் பயிற்சி மையங்கள்.
மதுரையில் புதிய கல்லூரி மாணவர் விடுதி
திருப்பரங்குன்றம், திருநீர்மலை கோயில்களில் ரோப் கார் வசதி ஏற்படுத்த 26 கோடி ரூபாய்.
மதுரை, சேலம், திருச்சி ஆகிய இடங்களில் உள்ள ஆவினில் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட தானியங்கி இயந்திரங்களைப் பொருத்திட 60 கோடி
ரூபாய்.
கலைஞர் ஏறு தழுவுதல் அரங்கம் உள்ள வளாகத்தில் தமிழர்களின் பண்பாடு, தொன்மையான வரலாறு,கலைகளை அரங்கேற்றம் செய்யும் வகையில் 20 கோடி ரூபாயில் புதிய வளாகம்" என சு.வெங்கடேசன் பட்டியலிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications