“உங்கள் உழைப்பு.. உங்களுக்கு!” இயக்குநர் மணிகண்டனிடம்.. தேசிய விருதை திருப்பி ஒப்படைத்த திருடர்கள்!
மதுரை: திரைப்பட இயக்குநரான மணிகண்டனின் வீட்டுக்குள் புகுந்து நகை, பணம் மற்றும் தேசிய விருதுகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் மர்மநபர்கள் தேசிய விருதை மட்டும் மணிகண்டன் வீட்டு வாசலில் வைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.
'காக்கா முட்டை' மற்றும் 'கடைசி விவசாயி' போன்ற படங்கள் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர்தான் இயக்குநர் மணிகண்டன். 'கடைசி விவசாயி' திரைப்படத்திற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்திருந்தது. இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இவரது சொந்த ஊர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியாகும். இவர் சென்னையில் இருப்பதால், இவரது உசிலம்பட்டி வீடு எப்போதும் பூட்டியே இருந்திருக்கிறது.

இதனை நீண்ட நாட்களாக நோட்டம் விட்டு வந்த மர்ம நபர்கள், கடந்த 8ம் தேதி அதிகாலையில் திடீரென கதவை உடைத்து உள்ளே புகுந்திருக்கிறார்கள். பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம், 5 பவுன் தங்க நகை மற்றும் மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்ட வெள்ளி தேசிய விருதுகளையும் அவர்கள் திருடி சென்றிருந்தனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் தேசிய விருதுகள் திருடுபோயுள்ள செய்தி வேகமாக பரவி பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் மணிகண்டனின் உசிலம்பட்டி வீட்டின் முன்பு காகித பொட்டலத்தை வீசி சென்றிருக்கிறார்கள். காலையில் இந்த பொட்டலத்தை பிரித்துப் பார்த்த அக்கம் பக்கத்தினர், அதில் தேசிய விருது இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அவர்கள் விருதை கைப்பற்றி அதில் உள்ள கை ரேகைகளை ஆய்வு செய்து வருகின்றனர். விருது சுத்தப்பட்டிருந்த காகிதத்தில், "அய்யா எங்களை மன்னித்துவிடுங்கள். உங்கள் உழைப்பு உங்களுக்கு" என்று எழுதப்பட்டிருக்கிறது. விருது திருப்பி வந்திருப்பதை நினைத்து சந்தோஷமடைவதா? அல்லது திருடு போன ரொக்கம் மற்றும் நகைகளை நினைத்து வருந்துவதாக என மணிகண்டனின் உறவினர்கள் குழப்பமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications