ரங்கசாமி ‘டம்மி’..! ’சூப்பர் முதல்வராக’ தமிழிசை சவுந்தரராஜன் செயல்படுகிறார்! நாராயணசாமி காட்டம்..!
மதுரை : புதுச்சேரியின் சூப்பர் முதல்வராக தமிழிசை சவுந்தரராஜன் செயல்படுகிறார் எனவும், முதல்வர் ரங்கசாமி டம்மி முதல்வராக இருக்கிறார் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசுவாமி வருகை தந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்தவர், " பிரதமர் மோடி ஆட்சியில் விலைவாசி அதிகரித்து இருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களை வலுப்படுத்துவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்து வருகிறார்.

நீட் தேர்வு
மாநில அரசு கூறியும் நீட் தேர்வு ரத்து செய்யாததால் மருத்துவ கனவில் இருந்த 18 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். இந்தியாவின் பணவீக்கம் 13% அதிகரித்து உள்ளது. அதேபோல் பொருளாதார வளர்ச்சி 9% லிருந்து 6% ஆக குறைந்து உள்ளது. கடந்த 8 ஆண்டு கால மோடி ஆட்சி சாதனை ஏதும் செய்யவில்லை. ரேஷன் கடையில் இலவச அரிசி உள்ளிட்ட காங்கிரஸின் திட்டங்களை பாஜகவின் திட்டமாக காட்டி வருகின்றனர்.

பாஜக திட்டம்
மதத்தை வைத்து ஆட்சியை பிடிக்கலாம் என்ற ஒரே திட்டத்தில் பாஜக இருக்கிறது அது நீடிக்காது. அமலாக்கத்துறை, சிபிஐ வைத்து எதிர்கட்சி தலைவர்களை பாஜக மிரட்டுகிறது. 2024ல் பாராளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்தால் பாஜக தோல்வியடையும். பாஜகவினரின் நபிகள் நாயகம் குறித்த பேச்சு இந்தியாவிற்கு மற்ற நாடுகள் மத்தியில் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான திட்டங்களை முதல்வர் நிறைவேற்றி வருகிறார். தமிழக அரசுக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை பொய்யான குற்றச்சாட்டுகளை தினசரி அமைச்சர் மீது தெரிவித்து வருகிறார்.

தமிழிசை சவுந்தரராஜன்
புதுச்சேரியில் கொலை, கொள்ளை, நில அபகரிப்பு அதிகரித்து உள்ளது. புதுச்சேரியின் சூப்பர் முதல்வராக தமிழிசை சவுந்தரராஜன் செயல்படுகிறார். ரெங்கசாமி டம்மி முதல்வராக இருக்கிறார். பெஸ்ட்(best) மாநிலமாக இருந்த புதுச்சேரி வோஸ்ட் (worst) மாநிலமாக மாறியுள்ளது. ஆதீனங்கள் அரசியல் பேசுவதென்றால் வெளியில் வந்து பேசுங்கள். ஆதீனங்களுக்குள் அரசியல் பேசுவது சரியில்லை. கோயில்களில் நடைபெறும் சில தவறுகளை அமைச்சர்கள் தடுக்க வேண்டியது அவர்களின் கடமை அதனை தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்து வருகிறார்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications