நீட் தேர்வு ரத்து மசோதா நிறைவேற்றப்படுமா? அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த முக்கிய பதில்!
மதுரை: தமிழ்நாட்டில் உள்ள எந்த பள்ளிக் கூடத்திலும் எப்போது வேண்டுமானாலும் எந்தவொரு முன்னறிவிப்பின்றி ஆய்வு செய்வேன் என்று அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆய்வு என்ற பெயரில் சம்பரதாயத்திற்கு வருவதாக இருக்க கூடாது என்று கூறியுள்ள ராஜ்மோகன், அதிகாரிகள் அனைத்து நேரங்களிலும் தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு அன்றைய தினமே பாடப்புத்தகங்கள், உபகரணங்கள் உள்ளிட்டவை அளிக்கப்பட்டன. இந்த நிலையில் அமைச்சர் ராஜ்மோகன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நான் ஒரு அமைச்சராக இல்லாமல் சகோதரனாக சொல்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள எந்த பள்ளியிலும் முன் அறிவிப்பின்றி ஆய்வு செய்ய வருவேன்.

இதனை யாரும் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒரு பொறுப்புணர்வாக எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்து அதிகாரிகளும், ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் சேர்ந்து ஒரு கூட்டு பொறுப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தை நாம் தீர்மானிக்கின்ற இடத்தில் இருக்கிறோம். ஆய்வுக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு சம்பரதாயமாக செல்லக் கூடாது.
அதனால் 38 மாவட்டங்களுக்கும் எப்போது வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் நாங்கள் நேரில் வந்து ஆய்வு செய்வோம். எல்லா நேரங்களிலும் தயார் நிலையில் வைத்து கொள்ள வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு. அதேபோல் தவெக ஆட்சி 3 மாதத்தில் கவிழும் என்று முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்க கூடாது. அதனை தவிர்த்திருக்கலாம்.
தவெகவை பொறுத்தவரை சொன்னபடியே கூட்டணியில் இருப்பவர்களுக்கும் அமைச்சரவையில் முதல்வர் விஜய் இடம் கொடுத்துள்ளார். அமைச்சர் வன்னி அரசுக்கு அமைச்சரவையில் இடம் அளித்திருப்பது தனி மனிதனுக்கானது அல்ல. நீண்ட காலமாக ஒடுக்கப்பட்டிருக்கும் மக்களுக்கான ஓர் அங்கீகாரம்.
கூட்டணி என்ற பெயரில் அவர்களின் முதுகில் ஏறி சவாரி செய்துவிட்டு, அவர்களின் வாக்குகளை மட்டும் வாங்கிவிட்டு அவர்களுக்கான அங்கீகாரத்தை மட்டும் இவ்வளவு காலமாக தராமல் இருந்தனர். அதனை முதல்வர் விஜய் முதல்முறையாக மாற்றியுள்ளார் என்று தெரிவித்தார். தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்யும் மசோதா நிறைவேற்றப்படுமா என்ற கேள்விக்கு, Wait and Watch என்று பதில் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications