ஒரே நாடு ஒரே தேர்தல்.. ஜெ. ஆதரித்த திட்டம் அது.. அதிமுகவின் ஆதரவு இருக்கும்.. ஓபிஎஸ் பேட்டி!
மதுரை: ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு ஆதரவு அளிப்பதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் ஜெயலலிதா ஆதரித்த திட்டம் என்றும், இதனை அதிமுக என்றைக்கும் ஆதரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
ஒரே தேர்தல் என்பது நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் இரண்டிற்கும் சேர்த்து ஒரே தேர்தல் நடத்துவது. ஒரே நாடு ஒரே தேர்தல் நடந்தால், மக்கள் ஒரே நேரத்தில் இரண்டு வாக்குகள் செலுத்த வேண்டியது இருக்கும்.
ஒன்று மாநில சட்டமன்றத்திற்கு, இன்னொன்று நாடாளுமன்றத்துக்கு. இதுபோன்று தேர்தல் நடத்துவதால் செலவு குறையும் என்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதேபோல் நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய பாஜக அரசு முனைப்பு காட்டி வருகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல்
இதுதொடர்பாக ஆய்வு செய்யும்படி மத்திய சட்ட அமைச்சகம் தேசிய சட்ட ஆணையத்தை கேட்டுக் கொண்டது. இதையடுத்து, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக மத்திய சட்ட ஆணையம் சார்பாக பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு கடிதம் அனுப்பி கருத்து கோரப்பட்டது. ஜனவரி 16ம் தேதிக்குள் தங்களுடைய கருத்துகளை தெரிவிக்கும்படி அரசியல் கட்சிகளுக்கு சட்ட ஆணையம் அறிவுறுத்தி இருந்தது.

ஜெயக்குமார் பேட்டி
இதற்கு, ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு தெரிவிப்பதாக எடப்பாடி பழனிசாமி பதில் கடிதம் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின்கீழ் 2024 நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலும் வந்தால், அன்றுதான் மக்களுக்கு உண்மையான பொங்கலாக இருக்கும் என தெரிவித்தார்.

ஓபிஎஸ் ஆதரவு
எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு ஆதரவளித்த நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் என்ன நிலைப்பாடு எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு அதிமுக ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.

ஜெ. ஆதரித்த திட்டம்
ஒரே நாடு ஒரே தேர்தல் முறை பற்றி கூறுகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் ஜெயலலிதா ஆதரித்த திட்டம். இதனை அதிமுக என்றைக்கும் ஆதரிக்கும். நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடக்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை என தெரிவித்துள்ளார். இதன் மூலம் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் இருவரும் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு ஆதரவளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications