பூரணம் அம்மாள்.. ரூ 7 கோடி நிலத்தை தானம்.. 32 வயதிலேயே புல்லரிக்க செய்த சம்பவம்.. என்னன்னு பாருங்க
மதுரை: மதுரையில் மகளின் நினைவாக ரூ 7 கோடி சொத்தை அரசு பள்ளிக்கு எழுதி கொடுத்த பூரணம் அம்மாள் தனது சிறுநீரகத்தையும் தானம் செய்துள்ளாராம்.
மதுரை சர்வேயர் காலனியை சேர்ந்தவர் ஆயி பூரணம் அம்மாள். இவருக்கு வயது 52 ஆகும். இவரது கணவர் உக்கிரபாண்டியன் கனரா வங்கியில் அலுவலக உதவியாளராக பணியாற்றியிருந்தார்.

அவர் சர்வீஸில் இருந்த போதே 1991 ஆம் ஆண்டு காலமாகிவிட்டார். இதையடுத்து அதே வங்கியில் வாரிசு அடிப்படையில் கிளார்க் வேலை பார்த்து வருகிறார். 31 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்தாலும் தனது மகள் ஜனனியை தனியாளாக இருந்து கஷ்டப்பட்டு படிக்க வைத்தார்.
அதன் பிறகு மகளுக்கு திருமணமான நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகளும் இறந்துவிட்டார். கணவர் இல்லாத நிலையில் மகளும் இறந்ததால் பூரணம் அம்மாள் உடைந்து போய்விட்டார். இதையடுத்து தனது மகளின் நினைவாக மதுரை கொடிக்குளம் கிராமத்தில் உள்ள தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தை அங்குள்ள அரசு பள்ளிக்கு தானமாக கொடுத்தார்.
பூரணம் அம்மாள் 5ஆம் வகுப்பு வரை படித்திருந்தாலும் படிப்பின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தார். இதனால்தான் ரூ 7 கோடி நிலத்தை கல்வித் துறைக்கு தானமாக எழுதி வைத்தார். அதற்கான பத்திரப்பதிவையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் ஒப்படைத்தார். இந்த நிலத்தை நல்ல காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பது மகளின் ஆசையாம்.
அதன்படியே நிலத்தை பள்ளிக்கு கொடுத்துவிட்டார் பூரணம் அம்மாள். மகளின் நினைவாக கொடுத்த நிலத்தில் கட்டடம் கட்டி அரசு உயர்நிலைப் பள்ளியை நடத்த வேண்டும். அங்கு தனது மகளுக்கு ஒரு சிலை வைத்தால் மிகப் பெரிய மகிழ்ச்சியாக இருக்கும் என பூரணம் அம்மாள் தெரிவித்திருந்தார். நிலத்தை கொடுத்த ஆயி பூரணம் அம்மாள் அந்த பள்ளி மாணவர்களுக்கும் தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறார்.
இப்படியே ஊரே தூக்கி வைத்துக் கொண்டாடும் பூரணம் அம்மாள், நிலத்தை தானமாக கொடுத்ததை விட தனது 32 ஆவது வயதில் அதாவது 20 ஆண்டுகளுக்கு முன்பு உறவினருக்கு சிறுநீரகத்தையும் தானமாக கொடுத்துள்ளாராம். இந்த தகவலை அரசு பள்ளி ஆசிரியர் செல்வம் என்பவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த செய்தி கேட்டு தனக்கு கண்ணீர் வந்துவிட்டதாகவும் கர்ணனை விட பெரிய வள்ளல் நீங்கள்தான் தாயே என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications