பூரணசந்திரன் தீக்குளித்து தற்கொலை! மதுரை அரசு மருத்துவமனையில் பாஜக, இந்து முன்னணி போராட்டம்
மதுரை: திருப்பரங்குன்றம் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தீக்குளித்து உயிரிழந்த பூரண சந்திரன் உடல், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு கூடிய பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி நேற்று மதுரை தல்லாங்குளம் அவுட் போஸ்ட் பெரியார் சிலை அருகே போலீஸ் பூத்தில் இளைஞர் பூர்ண சந்திரன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடல் தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவரது குடும்பத்தினரும் உறவினரும் கூடியுள்ளனர். இந்த நிலையில் பூரணசந்திரனின் உடலை அரசு மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்தனர்.
காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த உடற்கூராய்வு 10.15 மணிக்கு முடிந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க முயற்சித்தனர். அப்போது அங்கு திரண்ட பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் அந்த பகுதியை சுற்றிலும் சுமார் 500 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அதே போல் மற்றொரு பாஜக பிரிவினர் சார்பில் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் தொடங்கி இருக்கின்றனர்.
பின்னர் மருத்துவமனை நுழைவு வாயில் முன்பு திரண்ட அவர்கள், "பூரணசந்திரனுக்கு வீரவணக்கம்", திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவோம் என கோஷங்களை எழுப்பி வருகிறார்கள். இதனால் பிணவறை பகுதி பதற்றமாக காணப்படுகிறது.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், இந்து முன்னணி காடேஸ்வர சுப்பிரமணியம் உள்ளிட்டோர் வந்த பிறகுதான் உடலை வாங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்கிறார்கள்.
இதுகுறித்து தென்னிந்திய பார்வேர்ட் பிளாக் கட்சி தலைவர் திருமாறன், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி உயிர் தியாகம் செய்த பூரணசந்திரனுக்கு இரங்கல் தெரிவித்து மதுரையில் போஸ்டர் ஒட்டியவர்களை போலீஸார் கைது செய்தனர். அது போல் அவர்கள் ஒட்டிய போஸ்டர்களையும் கிழித்துவிட்டனர்.
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை இந்த அரசு நிறைவேற்றவில்லை. இதற்காக அரசு வெட்கப்பட வேண்டும். தமிழகத்தில் இந்த திராவிட மாடல் அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது. பூரணசந்திரன் ஜோதியாக இருந்து உயிர் தியாகம் செய்துள்ளார். அவரது ஜோதி திருப்பரங்குன்றம் மலையில் தீபமாக ஏற்றும் வரை ஓய மாட்டோம் என்றார்.












Click it and Unblock the Notifications