"அதிமுக தலைமை கழகம் உங்க அப்பா வீட்டு சொத்தல்ல..!" ஓபிஎஸை விட்டு விளாசும் ஆர்.பி.உதயகுமார்
மதுரை: அதிமுகவில் பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வரும் நிலையில், ஓபிஎஸை தாக்கி முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
அதிமுகவில் கடந்த சில நாட்களாகவே பல பரபரப்புகள் அரங்கேறி வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
அதேநேரம் மறுபுறம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த ஓபிஎஸ் தனது ஆதரவாளர்கள் உடன் ஆலோசனை நடத்தினார்.

ஓபிஎஸ்
மேலும், அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து சில முக்கிய கோப்புகளையும் அவர் எடுத்துச் சென்றார். இது தொடர்பான வீடியோவும் வெளியாகி இருந்தது. அப்போது ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி ஆதரவாளர்கள் இடையே மோதலும் கூட அரங்கேறியது. இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது. மேலும், அதிமுக தலைமை அலுவலகத்தில் புகுந்து கொள்ளை அடித்ததாகவும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்ட உள்ளது.

ஆர்.பி. உதயகுமார்
இதற்கிடையே ஓபிஎஸை சாடி பலரும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். இந்தச் சூழலில் தலைமை கழகத்தில் புகுந்து கோப்புகளை அள்ளி செல்ல தலைமை கழகம் உங்கள் தாத்தா வீட்டுச் சொத்தல்ல என்று முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து உதயகுமார், "தமிழகத்தில் 50 ஆண்டுகளாகச் சேவை செய்து சாமானிய மக்களுக்கு அரசியல் அங்கீகாரத்தை ஜனநாயக அடிப்படையில் பெற்றுத் தந்த இந்த இயக்கத்தை எம்ஜிஆர் 17.10.1972இல் தொடங்கினார்

வாரிசுகள்
எம்ஜிஆருக்கு பின்னால் இந்த இயக்கத்தை ரத்தம் சிந்தி வேர்வை சிந்தி, உலக தலைவர்கள் பாராட்டும் வழியில் இந்த இயக்கத்தை மூன்றாம் பெரிய இயக்கமாக உருவாக்கி, இயக்கத்தை ஜெயலலிதா சிறப்பாக வழிநடத்தினார்கள் தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் வாரிசுகளை அடையாளம் காண்பித்து வருகின்றனர். திமுக தலைவர் கருணாநிதி அவருக்குப் பின்னால் தனது மகன் ஸ்டாலினை தொண்டர்களுக்கு அடையாளம் காட்டினார்.

ஜெயலலிதா
டாக்டர் ராமதாஸ் அவர்கள் தனக்குப் பின்னால் வழிநடத்தத் தனது மகனை அடையாளம் காட்டினார். தேமுதிகவை எடுத்துக் கொண்டால் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதாவை அடையாளம் காட்டினார். அதேபோல் காங்கிரஸில் இருந்து தொடங்கி பல்வேறு கட்சிகள், தங்களது வாரிசுகளை அடையாளம் காட்டி வருகின்றனர். ஆனால் எம்ஜிஆருக்கு பின்னால் சிதறுபட்ட இந்த இயக்கத்தை உழைப்பால், தியாகத்தால் ஜெயலலிதா மீட்டெடுத்தார்.

எடப்பாடி பழனிசாமி
ஜெயலலிதாவுக்குப் பின் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் கழக ரீதியில் 70 மாவட்ட கழகச் செயலாளர்கள், 70க்கும் மேற்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள், 2500 மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் எல்லாம் திமுகவை எதிர்க்கச் சிம்ம சொப்பனமாகவும், மீண்டும் ஜெயலலிதா ஆட்சி மலர இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பேற்றார்.

ராமர் -லட்சுமணர்
அதனைத் தொடர்ந்து ராமருக்குப் பட்டாபிஷேகம் சுட்டுவது போல் விழா நடைபெற்ற போது, அங்கு லட்சுமணனாய் உடனிருந்து அந்த தியாகத்தில் இடம்பெற்று சேவையால் வரலாற்றில் இடம்பெற வேண்டியவர், அந்தக் கோட்டை தாண்டி சென்னையில் அதிமுக தொண்டர்களின் கோவிலாக வணங்கும் தலைமை கழகத்தில் வன்முறையை நிகழ்த்தி உள்ளார் ஒபிஎஸ்! இந்த முடி சூட்டு விழாவிற்கு லட்சுமணாக இருந்து சேவை தியாகத்தில் இடம்பெறாமல் துரோக வரலாற்றில் இடம்பிடித்தால் இன்றைக்கு அந்த துரோகிகளைத் தூக்கி எறிய வேண்டும் என்று அந்த பொதுக்குழு கூட்டத்தில் தொண்டர்கள் குரல் எழுப்பினார்கள்.

உடைந்துவிட்டது
ஓபிஎஸ் மூன்று முறை தமிழகத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் என்று தன்னை இந்த நிலைக்கு உயர்த்திய தலைமை கழகத்தை ரவுடிகளால், குண்டர்களால், காட்டுமிராண்டிகளால் தாக்கியும் இவர்களை வைத்து காலால் எட்டி உதைக்கும் சம்பவத்தைக் கண்டு தொண்டர்கள் இதயத்தில் ரத்தம் வடிந்து வருகிறது. தொண்டர்கள் இதயம் சுக்கு நூறாக உடைந்துள்ளது

கோப்புகள்
கழக 50 ஆண்டுக்கால வரலாற்றில் இது போன்ற வன்முறைச் சம்பவங்களை இந்த கழகம் கண்டதில்லை உண்மையான கழகத் தோழர்கள் யாரும் இதைச் செய்ய மாட்டார்கள் இந்த இயக்கத்தில் உள்ளவர்கள் அறவழியில் பயிற்சி பெற்றவர்கள் வன்முறை கலாசாரத்தைச் செய்ய மாட்டார்கள் இவர் செய்த செயலால் தலைமை கழகத்தைச் சீல் வைக்கும் வகையில் முடிந்து உள்ளது. அது மட்டுமல்ல அது அங்கு இருந்த கோப்புகள் எல்லாம் ஓபிஎஸ் வந்த வாகனத்தில் ஏற்றப்பட்டுள்ளது.

அப்பா சொத்து இல்லை
அதிமுக தலைமை கழகம் என்ன உங்கள் தாத்தா, இல்லை உங்கள் அப்பா சொத்தா, இல்லை உங்கள் சொத்தா இது ஒன்னரைகோடி கழகத் தொண்டரின் சொத்தாகும். ஜெயலலிதாவின் கையொப்பமிட்ட கோப்புகளை எல்லாம் எடுத்துச் சென்றுள்ளனர். கடந்த நாலரை ஆண்டு காலம் நீங்கள் இருந்தபோது அந்த கட்டிடத்திற்கு என்ன தியாகம் செய்தீர்கள். உங்களை ஜெயலலிதாவின் ஆன்மாவும் எம்ஜிஆரின் ஆன்மாவும் மன்னிக்காது.

ஆத்மா
அதுமட்டுமல்ல வைத்தியலிங்க்தின் சொந்த ஊரான ஒரத்தநாடு பகுதியில் இருந்து ரவுடிப்படைகள், குண்டர் படைகள் எல்லாம் தலைமை கழகத்தைத் தாக்கிவிட்டு அவர்களின் ஊருக்குத் திரும்பிச் சென்ற போது அவர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது . இதில் ஒருவர் மரணமும் சிலர் காயமும் அடைந்துள்ளனர். இதன் மூலம் எம்ஜிஆரின் ஆத்மா, ஜெயலலிதாவின் ஆத்மா உயிரோடு உள்ளது என்பதை நான் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

காப்போம்
தலைமை கழகத்தில் நடைபெற்ற இந்த வன்முறைச் சம்பவத்தைக் கழக அம்மா பேரவை மிகவும் கண்டிக்கிறது. கழகத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில், இதுபோன்று செயல்களில் ஈடுபட்டால் கழக அம்மா பேரவை ராணுவப்படையாகப் பாதுகாப்புப் பணியில் முன்னே நின்று கழகத்தையும், தலைமை கழகத்தையும் காக்கும் தியாக பொறுப்பில் இருப்போம். இயக்கத்தின் விவாதங்கள் வரலாம், சத்தியாகிரகம் செய்யலாம். அகிம்சை வழியில் தான் நம் நாடு விடுதலை பெற்றது..

ஜெயலலிதாவின் பிள்ளைகளே இல்லை
வன்முறை என்பது கத்தி போன்றது.. வன்முறை மூலம் அணுகினால் நீங்கள் ஜெயலலிதாவின் பிள்ளைகளே இல்லை.. ஓபிஎஸ் அழைத்து வந்தது தொண்டர்கள் படை அல்ல. குண்டர்கள் படையாகும். தர்மயுத்தம் நடைபெற்று முடிந்து நீங்கள் கழகத்தில் இணைந்த போது தலைமைக் கழகத்திற்கு வந்த பொழுது முதல் முதலில் வாசலில் தொட்டு வணங்கினீர்கள். அப்படி என்றால் அது நாடகமா? தர்மம் வெல்லும், சத்தியம் வெல்லும், அராஜகம் ஒருபோதும் வென்றது கிடையாது" என்று அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications