சாத்தான்குளம் வழக்கு: உயர் அதிகாரிகள் சொன்னதால் அடித்தோம் என்பதை ஏற்க முடியாது.. நீதிபதி சொன்ன முக்கிய பாயிண்ட்
மதுரை: தூத்துக்குடி சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 9 போலீசாருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது தீர்ப்பு விவரத்தை வாசித்த நீதிபதி இதனை படிக்கும்போதே மனது பதறுகிறது.. உயர் அதிகாரிகள் சொன்னதால் அடித்தோம் என்று சொல்வதை ஏற்க முடியாது.. தந்தையும் மகனும் நிராயுதபாணியாக இருந்தும் இரவு முழுவதும் இரக்கமின்றி தாக்கியுள்ளனர். பழிவாங்கும் நோக்கில் கொடூர சம்பவம் நடந்து இருக்கிறது என்று தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது நேர கட்டுப்பாட்டை மீறி தங்களது செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறப்பட்டது.

இது தொடர்பாக சாத்தான்குளம் போலீசார் தந்தை ஜெயராஜை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். தந்தையை அழைத்து சென்றதால் மகன் பெனிக்ஸ் காவல் நிலையம் சென்றார். அப்போது போலீசார் அவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் கடுமையாக தாக்கியதில் 2 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
காவல் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை மகன் உயிரிழந்தது, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதையடுத்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பால கிருஷ்ணன், ரகு கணேஷ், பால்துரை, தலைமை காவலர் முருகன், காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து ஆகிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு நடந்து வந்த நிலையில் சப் இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனா தொற்றால் சிறையிலேயே உயிரிழந்தார். தொடர்ந்து இந்த வழக்கானது கடந்த 6 ஆண்டுகளாக மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார். அப்போது, சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் உள்பட 9 காவலர்களும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தொடர்ந்து குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என சி.பி.ஐ. மற்றும் மாநில அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது 9 போலீஸ்காரர்களுக்கும் அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும் என சிபி.ஐ. மற்றும் ஜெயராஜ் குடும்பத்தினர் சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி இன்று தண்டனை விவரத்தை அறிவித்தார்.
இதன்படி கைது செய்யப்பட்ட காவலர்கள் 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். இன்று மாலை 5.30 மணியளவில் சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 9 போலீஸ்காரர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து நீதிபதி முத்துக்குமரன் தண்டனை விவரங்களை அறிவித்தார்.
அப்போது நீதிபதி கூறுகையில், தந்தையும் மகனும் நிராயுதபாணியாக இருந்தும் இரவு முழுவதும் இரக்கமின்றி தாக்கியுள்ளனர். பழிவாங்கும் நோக்கில் கொடூர சம்பவம் நடந்து இருக்கிறது. எங்கு அதிகாரம் உள்ளதோ, அங்கு பொறுபுகளும் உண்டு. இது சாதாரண குற்றமல்ல..
தந்தை முன் மகனையும், மகன் முன் தந்தையையும் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனை எளிதாக கருத முடியாது.. மரண தண்டனை விதிப்பதே சரியானது. உயர் அதிகாரிகள் சொன்னதால் அடித்தோம் என்பதை ஏற்க முடியாது.. படித்தவர்கள் என்பதால் சாதாரண குற்றமாக கருத முடியாது" என நீதிபதி தெரிவித்தார்.
பின்னர் வழக்கின் முதல் குற்றவாளியான காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு இரட்டை மரண தண்டனையும், ரூ.15 லட்சம் அபராதமும் விதித்தார். இதேபோல் சப் இன்ஸ்பெக்டர்கள் பால கிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து ஆகிய 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications