நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் எஸ்.டி.பி.ஐ.! மதுரையில் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு!
மதுரை: எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மதுரையில் வரும் டிசம்பர் மாதம் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு நடைபெறும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த மாநாட்டை எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்தவிருப்பது குறிப்பிடத்தக்கது.

மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, மதச்சார்பின்மை மாநாடு குறித்து முபாரக் கூறியதாவது;
'' இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிநாதங்களில் ஒன்று மதச்சார்பின்மையாகும். அரசின் சேவைகள், குடிமக்களுக்கான உரிமைகளில் எவ்வித பாரபட்சமும் இருக்கக் கூடாத என்பதற்காகத் தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மதச்சார்பின்மையை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது.''
''நாட்டின் உன்னதமான மதச்சார்பின்மை மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. பல்வேறு வழிகளில் மதச்சார்பின்மைக்கு எதிராக ஆபத்துக்கள் அதிகரித்துள்ளன. அரசியலமைப்பு சாசனத்திலிருந்து மதச்சார்பின்மை மற்றும் சோசலிசம் வார்த்தைகளை நீக்கும் நடவடிக்கைகளை ஆளும் ஒன்றிய பாஜக அரசே செய்து வருகின்றது.''
''மதச்சார்பின்மை மீதான மறைமுகத் தாக்குதல்கள் அரசின் ஆதரவுடன் இப்போது நேரடியாகவும் வெளிப்படையாகவும் மாறிவிட்டன. மக்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. மதவெறுப்புகள் அங்கிங்கெனாதபடி நாட்டின் அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றன.''
''இவையெல்லாவற்றிற்கும் தீர்வாக, அரசியலமைப்பை, அதன் உன்னத உயர்ந்த கோட்பாடுகளை உயர்த்திப் பிடிக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ஆகவே, நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மாண்பை காக்கவும், நாட்டின் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையின் லட்சியங்களை நிலைநிறுத்தவும் 'வெல்லட்டும் மதச்சார்பின்மை!' என்ற முழக்கத்தோடு எதிர்வரும் டிசம்பர் மாதம் மதுரை மாநகரில் மாபெரும் 'மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு' நடத்த எஸ்.டி.பி.ஐ. கட்சி திட்டமிட்டுள்ளது.''
'' நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் உறுதிசெய்துள்ள மதச்சார்பின்மையை காக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த மாநாட்டில், அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் கலந்துகொண்டு மாநாட்டை வெற்றிபெறச் செய்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications