செங்கோட்டையன் அதிமுகவில் ராஜா மாதிரி இருந்தாரு! இப்போ கூஜாவாகிட்டாரு! திண்டுக்கல் சீனிவாசன் அட்டாக்
மதுரை: அதிமுகவில் ராஜாவாக இருந்த செங்கோட்டையன் தற்போது கூஜாவாகிவிட்டார் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை தினகரன் கொள்ளையடித்து வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ளார் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
மதுரையில் நடந்த விழாவில் முன்னாள் அமைச்சரும் அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருப்பதாவது:

மன்னிப்பு கேட்டாலும் கட்சியில் சேர்க்க மாட்டோம்.
நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்டாலும் அதிமுகவில் சேர்த்துக்க மாட்டோம். டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மன்னிப்பு கேட்டால் கட்சியில் சேர்க்க ஆலோசனை நடத்துவோம்.
அதிமுகவில் ராஜாவாக இருந்த செங்கோட்டையன் தற்போது கூஜாவாகிவிட்டார். ஜெயலலிதாவால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டவர் துரோகி டிடிவி தினகரன்.
செங்கோட்டையன் முன்னால் வந்தவர் என்பதால் அவர் தகுதி வாய்ந்த மூத்த நிர்வாகியா? எடப்பாடி பழனிசாமிக்கு முன்னால் செங்கோட்டையன் பிறந்ததால் அவர் மூத்த நிர்வாகியாகிவிடுவாரா. எல்லா தகுதிகளும் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் உண்டு.
எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக வர வேண்டும் என்பது தெய்வத்தின் தீர்ப்பு. நானும் ராஜன் செல்லப்பாவும் கூட மூத்த நிர்வாகிகள்தான். ஜெயலலிதா இருக்கும் போதே செங்கோட்டையன் முதல்வராக விரும்பியவர். அதனாலேயே அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.
செங்கோட்டையன் எதற்காக இருமுறை வந்த வாய்ப்பை விட வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ளார். அது போல் திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கட்சியின் 54 ஆவது பொதுக் கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது.
அதில் பேசிய சீனிவாசன், "நான்கரை ஆண்டுகளாக மக்களை பற்றி கவலைப்படாமல் தற்போது உங்களுடன் ஸ்டாலின் என மனுக்களை பெற்று வருகிறார். தேர்தலின் போது நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்துவிட்டு மக்களை ஏமாற்றினர்.
ரூ 1000 கொடுத்துவிட்டு ரூ 5000 வரை மக்களிடம் இருந்து பறிக்கிறார்கள். டி.டி.வி.தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் போன்றவர்கள் வெளியே சென்று விட்டதால் அ.தி.மு.க. அழிந்து விட்டதாக பேசுகின்றனர். அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது.
தன்னை வளர்த்த இயக்கத்தை மறந்துவிட்டு செங்கோட்டையன் எதிர்முகாமுக்கு சென்றுள்ளார். தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும்போது தினகரன், ஓ.பன்னீர்செல்வத்திற்கு நடுவில் அவர் சிக்கிக் கொண்டார்.
முதல் நாளிலேயே அவருக்கு இந்த நிலை என்றால் வரும் காலங்களில் என்ன நடக்கும் என்பதை கட்சியினர் அறிவார்கள். யாரும் இருக்கும் இடத்தில் இருந்தால்தான் அவர்களுக்கு மரியாதை கிடைக்கும். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சகிகலா உதவியாளராக இருந்தார். டிடிவி தினகரன் போன்றோர் ஜெயலலிதாவின் வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையடித்துள்ளனர். விரைவில் தினகரன், ஓபிஎஸ், அவரது இரு மகன்கள் மீது வழக்குப் பதிய போவது உறுதி.
சசிகலா, தினகரன், ஓபிஎஸ் செங்கோட்டையன் ஆகியோர் யாரை ஒருங்கிணைக்க போகிறார்கள் என தெரியவில்லை. அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் அனைவரும் சரணடைந்து விட்டனர். இவர்கள் தனியாக கட்சி ஆரம்பித்து மக்களை சந்திக்க வேண்டும். எம்ஜிார், ஜெயலலிதாவின் பெயர்களை பயன்படுத்தி ஊரை ஏமாற்றுகிறார்கள். இவர்கள் 4 பேருடன் வேறு யாராவது ஒன்று, இரண்டு பேர் இருந்தால் அவர்களும் அதிமுகவுக்கு வந்துவிடுவார்கள். இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications