அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 23ல் திறந்து வைப்பார்.. அமைச்சர் தகவல்!
மதுரை: மதுரை அலங்காநல்லூரில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தை ஜனவரி 23 அல்லது 24ஆம் தேதியன்று முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பார் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
தைத் திருநாள் பொங்கல் பண்டிகையையொட்டி, தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அதனை தொடர்ந்து பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.

ஜனவரி 15ஆம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும். இதற்காக விழாக்குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 16ஆம் தேதி பாலமேடு மஞ்சமலை ஆற்று திடல் பகுதியில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. 17ஆம் தேதியன்று உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் கோட்டை முனியாண்டி திடலில் நடைபெற உள்ளது.
மதுரை மாவட்டம் , உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, "மதுரை அலங்காநல்லூரில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தை ஜனவரி 23 அல்லது 24ஆம் தேதியன்று முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பார்" எனத் தெரிவித்தார்.
உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பார்வையாளர்கள் மரங்களில் ஏறியும், வீடுகளின் மாடிகளில் நின்றும் ஆபத்தான முறையில் பார்க்க வேண்டிய சூழல் இருந்தது. இதையடுத்தே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 10 ஆயிரம் பேர் பார்க்கும் அளவில் பிரமாண்ட நிரந்தர பார்வையாளர்கள் ஸ்டேடியம் அமைக்கப்பட்டு வருகிறது. ரூபாய் 44 கோடி செலவில் 67 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது ஜல்லிக்கட்டு மைதானம்.












Click it and Unblock the Notifications