மதுரையில் கோவிலுக்கு மனைவியுடன் சென்ற தேனி எம்பி மகன்.. மருத்துவமனையில் அனுமதி.. என்ன நடந்தது?
மதுரை: தேனி தொகுதி தி.மு.க. எம்.பி. தங்கதமிழ்செல்வனின் மகன் நிஷாந்த் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவரது வீடு மதுரை கே.கே.நகர் லேக்வியூ பகுதியில் இருக்கிறது. நேற்று நிஷாந்த் மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலுக்கு தனது கர்ப்பிணி மனைவியுடன் தரிசனம் செய்ய சென்றுள்ளார். அங்கு பல தேங்காய் வாழைப்பழம் வாங்கிய போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் நிஷாத்தை தாக்கியதாக கடை உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனி தொகுதி தி.மு.க. எம்.பியாக இருப்பவர் தங்கதமிழ்ச்செல்வன். இவரது மகன் நிஷாந்த்துக்கு 30 வயது ஆகிறது. மதுரை கே.கே.நகர் லேக்வியூ பகுதியில் வசித்து வரும் இவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞராக உள்ளார். நேற்று நிஷாந்த் மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலுக்கு தனது கர்ப்பிணி மனைவியுடன் தரிசனம் செய்ய சென்றிருக்கிறார்.

அப்போது நிஷாந்தும் அவரது மனைவியும் மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் வாசலில் தேங்காய் வாழைப்பழம் உள்பட பூஜை பொருட்களை வாங்க விரும்பியுள்ளார்கள். இந்நிலையில் தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் தேங்காய், பழம் வியாபாரம் செய்யும் உரிமையை அப்பகுதி மாணிக்கம் நகரை சேர்ந்த 56 வயதாகும் சமயமுத்து , அவருடைய மகன் மணிகண்டபிரபு (25) ஆகியோர் ஏலத்திற்கு எடுத்துள்ளனர். அவர்களிடம் அர்ச்சனை செய்வதற்கு தேங்காய், பழத்தட்டை நிஷாந்த்தும் அவரது மனைவியும் கேட்டுள்ளார்.
அப்போது கோவில் நிர்வாகம் தரப்பில் ஒரு தேங்காய், இரு வாழைப்பழம், வெற்றிலை கொண்ட தட்டு ரூ.60 என விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கடைக்காரர்கள் ரூ.90 கேட்டனராம். நிஷாந்தும் பணம் கொடுத்து வாங்கினாராம். அப்படி பூஜைக்கு வாங்கிய நிலையில், அதில் ஒரு வாழைப்பழம் லேசாக அழுகி இருந்ததால் வேறு பழம் தருமாறு கேட்டார். பின்னர் தேங்காய் வெடிப்பு ஏற்பட்ட மாதிரி இருந்ததால் வேறு தேங்காய் வேண்டும் என்று நிஷாந்த் கேட்டாராம். இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த சமயமுத்துவும், மணிகண்டபிரபுவும் தேங்காய்களை நிஷாந்த் மீது சரமாரியாக வீசியதாக கூறப்படுகிறது. உடனே நிஷாந்த் தனது மனைவி மீது தேங்காய் பட்டு விடக்கூடாது என்பதற்காக கடைக்குள் சென்று அவர்களை தடுக்க முயன்றுள்ளார்களாம். அப்போது அவர்கள் அங்கிருந்த நாற்காலியை எடுத்து நிஷாந்த்தை தாக்கியதில் அவரது மண்டை உடைந்துவிட்டது.
இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேலும் இது குறித்து தெப்பக்குளம் போலீசில் நிசாந்த் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடை உரிமையாளரான மாணிக்கம் நகரை சேர்ந்த 56 வயதாகும் சமயமுத்து, அவருடைய மகன் மணிகண்டபிரபு (25) ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications