மன்னிக்கவே முடியாது.. திருப்பரங்குன்றம் சந்தனக்கூடு விழா உள்பட நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் 5 கேள்விகள்
மதுரை: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவை மீறியதை மன்னிக்க முடியாது என கூறிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், நேற்று வழக்கு விசாரணையின் போது, ஐந்து கேள்விகளை எழுப்பினார். குறிப்பாக சந்தனக்கூடு விழாவின்போது ஏன் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை, கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தின் அருகில் கொடியேற்றம் நடந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த மாதம் 1-ந்தேதி உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்த காரணத்தால், உத்தரவை நிறைவேற்ற மறுத்ததுடன், கார்த்திகை தீபத்திருநாள் அன்று (டிசம்பர் மாதம் 3-ந்தேதி) தீபம் ஏற்றப்படவில்லை.

ஜிஆர் சுவாமிநாதன் விசாரணை
இதனால் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் செயல் அலுவலர், கலெக்டர், மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மேல்முறையீடு செய்துள்ளோம்
அப்போது மதுரை கலெக்டர் பிரவீன்குமார், மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர் இனிகோ திவ்யன், திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர் யக்ஞநாராயணன் ஆகியோர் நேரில் ஆஜராகினார்கள். இந்த விசாரணையின் போது தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன், கூடுதல் குற்றவியல் வக்கீல் ரவி ஆகியோர் ஆஜராகி, 'திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், அதில் முடிவெடுக்கப்படும் வரை இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஒத்திவைக்க வேண்டும்' என வாதாடினர்.
144 தடை உத்தரவு
அப்போது உயநீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த அதிகாரிகளிடம் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் சரமாரியாக கேள்விகளை எழுப்பி இருந்தார். இதன்படி, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது, கோர்ட்டின் உத்தரவின்பேரில் தீபம் ஏற்ற சென்றவர்களை தடுத்தது ஆகிய நடவடிக்கைகள் நீங்களாகவே மேற்கொண்டதா? அல்லது வேறு அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி நடந்தீர்களா? என நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார். அதற்கு மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார், துணை போலீஸ் கமிஷனர் இனிகோ திவ்யன் ஆகியோர், 'நாங்களாகவே தன்னிச்சையாக எடுத்த முடிவுகள் தான்' என பதில் அளித்தனர்.
எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?
தொடர்ந்து திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர் யக்ஞநாராயணனிடம், 'திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி அங்கு கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தின் அருகில் கொடியேற்றம் நடந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?' என நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் கேள்வி எழுப்பினார்.
குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்
அதற்கு கோவில் செயல் அலுவலர் யக்ஞநாராயணன் பதில் அளிக்கையில், 'இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். கோவில் சார்பில் ஆஜரான வக்கீல் சந்திரசேகர், 'சம்பந்தப்பட்ட இடத்தில் கொடி ஏற்றியதற்கு தர்கா நிர்வாகத்தினர் முறையான அனுமதி பெறவில்லை. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்து, குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று கூறினார்.
அமைச்சர் சேகர்பாபு சொன்னாரா?
இதையடுத்து கோவில் செயல் அலுவலர் யக்ஞநாராயணிடம், 'உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததை நீங்கள் தான் செய்தீர்களா? அல்லது அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சொல்லி செய்தீர்களா?. சந்தனக்கூடு விழாவின்போது ஏன் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை?' என நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் கேள்வி எழுப்பினார்.
தலைமை செயலாளர் ஆஜராக வேண்டியதிருக்கும்
இதுதொடர்பாக உரிய பதில் அளிக்கவில்லை என்றால், தமிழக அரசின் தலைமை செயலாளர் பதில் அளிக்க வேண்டியது வரும் என்றும் நீதிபதி எச்சரித்தார். இதையடுத்து மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் ஜி.கார்த்திகேயன், கே.பி.எஸ்.பழனிவேல்ராஜன் மற்றும் வக்கீல் அருண்சுவாமிநாதன் ஆகியோர், 'தீபத்தூண் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இருப்பதை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் உறுதி செய்துள்ளது. இதன்மூலம் அதிகாரிகள் கோர்ட்டு உத்தரவை அவமதித்து உள்ளனர்' என்றனர்.
இனிகோ திவ்யன் தடுத்துள்ளார்
விசாரணை முடிவில் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறுகையில், தீபம் ஏற்றும் உத்தரவை தடுக்கும் வகையில் மதுரை கலெக்டர் பிரவீன்குமார் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். கலெக்டரின் தடை உத்தரவை இந்த கோர்ட்டு ரத்து செய்தது. ஆனாலும் கோர்ட்டு உத்தரவின் பேரில் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை துணை போலீஸ் கமிஷனர் இனிகோ திவ்யன் தடுத்துள்ளார்.
குற்றச்சாட்டு பதிவு
இதற்கு முறையான காரணத்தை தெரிவிக்காவிட்டால், நீதிமன்ற உத்தரவை அவமதித்ததற்காக பிப்ரவரி 2-ந்தேதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும்" இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார். இந்த வழக்கு பிப்ரவரி 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications