திருப்புவனம் அஜித் குமார் வழக்கு.. விசாரணை அறிக்கை தாக்கல்! சிபிஐக்கு ஹைகோர்ட் கிளை போட்ட உத்தரவு
சென்னை: சிவகங்கை திருப்புவனம் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக நீதிபதி ஜான் சுந்தர்லால் தலைமையில் அமைக்கப்பட்ட ஒருநபர் விசாரணை ஆணையம் இன்று ஐகோர்ட் மதுரை கிளையில் விசாரணை அறிக்கையினை தாக்கல் செய்தது. அப்போது குற்றத்திற்கான முகாந்திரம் இருப்பது தெரியவருவதாக நீதிபதி கூறினார். மேலும் அடுத்த வாரத்துக்குள் சிபிஐ விசாரணையை தொடங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
முன்னதாக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுரை நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை நடந்தபோது அதனை சிலர் வீடியோவாக எடுத்துள்ளதாகவும், அந்த வீடியோ இணையத்தில் பரவி வருவதாகவும் கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று கூறினர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித் குமார் (வயது 28). கடந்த 27 ஆம் தேதி அன்று இந்த கோவிலுக்கு விருதுநகரை சேர்ந்த பேராசிரியர் நிகிதா என்பவர் அவரது தாயாருடன் வந்திருந்தார்.

9 பவுன் நகை மாயம்
நிகிதாவின் தாயார் வீல் சேரில் தான் வர முடியும் என்பதால், அங்கு காவலாளியாக பணிபுரிந்து வந்த அஜித் குமாரிடம் உதவி கேட்டுள்ளார். காரை பார்க் செய்ய வேண்டும் என்று கேட்டதாகவும், அதற்கு அவர் கார் ஓட்டத் தெரியாது என்று கூறி உதவிக்கு ஒருவரை அழைத்து அவர் மூலமாக காரை பார்க் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே அந்த காரில் 9 பவுன் நகை இருந்தது என்றும், அதனை காணவில்லை எனவும் நிகிதா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரையடுத்து இளைஞர் அஜித் குமாரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதில் தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கொடூரமான முறையில் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
நீதிபதி ஜான் சுந்தர்லால் விசாரணை
பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் 44 இடங்களில் காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக அவர் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கு விசாரணை ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதிகள் சுப்ரமணியம், மரிய கிளாட் அமர்வில் நடந்து வருகிறது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிறப்பு விசாரணை அதிகாரியாக மாவட்ட கூடுதல் நீதிபதி ஜான் சுந்தர்லாலை நியமித்து உத்தரவிட்டார். மேலும் விசாரித்து அதற்கான அறிக்கையை ஜூலை 8-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். அதன்பேரில் நீதிபதி ஜான் சுந்தர்லால் திருப்புவனம் காவல் நிலையம், மடப்புரம் கோவில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து, 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினார்.
குற்றத்திற்கான முகாந்திரம் உள்ளது
இந்த நிலையில் நீதிபதி ஜான் சுந்தர்லால் இன்று மூடி சீலிடப்பட்ட உறையில் தனது இறுதி அறிக்கையினை தாக்கல் செய்தார். நீதிபதிகள் சுப்ரமணியம், மரிய கிளாட் அமர்வு முன்பாக இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில், சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட்டால், சாத்தான்குளம் வழக்கு போல இந்த வழக்கும் தாமதம் ஆக வாய்ப்பு உள்ளது. எனவே சிபிஐ விசாரணைக்கு தடை கோரப்பட்டது.
இதையடுத்து கூறிய நீதிபதிகள், சட்டவிரோத காவல் மரணம் என்பது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது ஆகும். இந்த வழக்கில் அஜித் குமாரின் தாயாருக்கும் உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும். கூடுதல் நீதிபதி தாக்கல் செய்த அறிக்கைபடி பார்த்தால், இந்த வழக்கில் விதிமீறல் மற்றும் குற்றத்திற்கான முகாந்திரம் இருப்பது தெரியவருகிறது.
வழக்கு தொடர்பாக மாவட்ட கூடுதல் நீதிபதி பாதி விசாரணையை முடித்து இருக்கிறார். மீதி விசாரணையை சிபிஐ அதிகாரிகள் முடிக்க வேண்டும். அதற்கு ஏற்ப அடுத்த ஒரு வாரத்துகுள் சிபிஐ விசாரணையை தொடங்க வேண்டும். குறிப்பாக சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அஜ்மல் கான், டிஜிபி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் சகோதரருக்கு அரசு வேலை மற்றும் அவரது குடும்பத்துக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு இருக்கிறது. சிபிஐ தரப்பு விசாரணைக்கும் தமிழக அரசு பரிந்துரைக்கிறது.
மதுரை நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை நடந்தபோது அதனை சிலர் வீடியோவாக எடுத்துள்ளதாகவும், அந்த வீடியோ இணையத்தில் பரவி வருவதாகவும் கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று கூறினர்.












Click it and Unblock the Notifications