“இனிமேல் ஒவ்வொரு குழந்தைக்கும் முதல்வர் ஸ்டாலினோடு சேர்த்து இரண்டு தாய்” அன்பில் மகேஷ் நெகிழ்ச்சி
மதுரை: அண்ணாவின் பிறந்தநாளான இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது கனவுத் திட்டமான 'காலை சிற்றுண்டித் திட்டத்தை' மதுரையிலுள்ள நெல்பேட்டையில் தொடங்கி வைத்தார். அதற்கு முன்பாக அண்ணா சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பிறகு மதுரை மாநகராட்சியில் செயல்பட உள்ள மொத்தம் 26 பள்ளிகளுக்கு உணவுகளை விநியோகிக்க கூடிய வாகனங்களைக் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். மொத்தம் பத்து வாகனங்கள் இதற்காக பயன்படுத்த உள்ளன.
அதற்குமுன்னதாக பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கும் சமையல் கூடத்தைச் சென்று பார்வையிட்டார். அங்கே தயாராகும் உணவை உண்டு பரிசோதித்தார்.

முதல்வருடன் சிற்றுண்டி
பின் திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளிக்குச் சென்று குழந்தைகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார். அப்போது அருகே அமர்ந்திருந்த மாணவிக்கு அவரே உணவை ஊட்டிவிட்டார். பின் அருகிலிருந்த மாணவனுக்கு உணவை ஊட்டினார். மேலும் பல குழந்தைகளுக்கு அவரே உணவைப் பரிமாறினார். இந்த நிகழ்வின் போது அமைச்சர் கீதா ஜீவன் முதல்வருடன் சேர்ந்து உணவைப் பரிமாறினார். அதன்பிறகு தொடக்கவிழாவில் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், திராவிட இயக்க வரலாற்றில் 100 ஆண்டுக்கால திட்டம் இது என்றார்.

அமைச்சர் அன்பில் மகேஷ்
மேலும் தொடர்ந்து பேசிய அவர், "தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று சொன்னவர் எம்.கே. பாரதி. அதாவது மகாகவி பாரதி. அப்படி ஒவ்வொரு குழந்தைக்கும் உணவளித்து புதிய ஜகத்தினை உருவாக்குவோம் என்று செய்து காட்டுபவர் மு.க.ஸ்டாலின். சோழநாடு சோறுடைத்து. பாண்டிய நாடு முத்துடைத்து என்று சொல்வார்கள். சோழநாட்டு மைந்தன் இன்று பாண்டிய நாடும் சோறுடைத்து என்று சொல்லும் அளவுக்கு இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்திருக்கின்றார்.

நீதிக் கட்சி
இந்தப் பள்ளியின் பெயர் ஆதிமுலம். இந்தத் திட்டத்தின் ஆதிமுலமே நீதிக்கட்சிதான். அந்தக் கட்சியால் தொடங்கப்பட்டதுதான். அதை முதலமைச்சரே குறிப்பிட்டார். நீதிக்கட்சியால் 100 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட திட்டம். அதன் தொடர்ச்சியாக 'காலை சிற்றுண்டித் திட்டத்தை' நாங்கள் தொடங்கி இருக்கிறோம் என்று சொல்வதைவிட மீண்டும் 100 ஆண்டுக்கால கொள்கை தீபத்தை நாங்கள் ஏற்றி இருக்கிறோம் என்றே குறிப்பிட வேண்டும்.

பெண்களுக்கு இலவச பஸ்
ஆட்சிக்கு வந்த 16 மாதத்தில் பெண்கள் இலவசமாகப் பேருந்தில் பயணிக்குத் திட்டத்தை முதல்வர் தந்தார். அதில் எத்தனைப் பெண்கள் காலையில் இன்று குழந்தைக்கு சமைக்காமல் வந்துவிட்டோமே என்று ஏக்கத்தில் வேலைக்குச் சென்றார்களோ என்று என்று தெரியாது. ஆனால் இன்றிலிருந்து அந்த ஏக்கத்தை முதலமைச்சர் போக்கி இருக்கிறார். இன்றிலிருந்து ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டு தாய்கள். ஒன்று, பெற்ற தாய். இரண்டு, அந்தக் குழந்தைகளுக்கு உணவளிக்கும் நம் முதலமைச்சர்.

தாய் வாழ்த்து
'ஏழைக்கு எழுத்தறிவித்தல் புண்ணியம் கோடி' என பாரதி சொன்னார். எழுத்தறிவிப்பதற்கே புண்ணியம் கோடி. நீங்கள் எழுத்தறிவித்தலோடு உணவளித்திருக்கிறீர்கள். உங்களுக்குக் கோடான கோடி புண்ணியம் சேரட்டும். உங்களுக்குப் புண்ணியத்தின் மீது நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனால் இந்தத் திட்டத்தின் வழியே உங்களை ஒவ்வொரு தாயும் வாழ்த்துவார்கள். அந்த வாழ்த்துகள் இன்னும் உங்களை உழைப்பதற்கான ஊக்கத்தை வழங்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications