தவெக மாநாடு மேடை உச்சியில் அண்ணா, எம்ஜிஆர் புகைப்படம் வைத்தது ஏன்? தவெக நிர்வாகி கொடுத்த விளக்கம்!
மதுரை: தவெக மாநாடு மேடையின் உச்சியில் திமுக நிறுவனரான அண்ணா மற்றும் அதிமுக நிறுவனரான எம்ஜிஆர் ஆகிய இருவரும் இடம்பெற்றது ஏன் என்ற கேள்விக்கு தவெக நிர்வாகி சிடி நிர்மல் குமார் விளக்கம் கொடுத்துள்ளார். அண்ணா மற்றும் எம்ஜிஆர் இருவரும் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற பொதுவான தலைவர்கள் என்று கூறிய அவர், அவர்களின் புகைப்படங்களைப் பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை என்று தெரிவித்தார்.
மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு நாளை மறுநாள் நடக்கவுள்ளது. 500 ஏக்கரில் மாநாட்டுக்கான திடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 10 லட்சம் தொண்டர்களைத் திரட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டின் முதன்மை நோக்கமாக மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய் என்ற வாசகம் உள்ளது.

மதுரை மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள பேனர்கள், போஸ்டர்களில் இதே வாசகம் இடம்பெற்றுள்ளது. அதேபோல் தென் மாவட்டங்களில் இருந்து அதிகளவிலான தொண்டர்கள் வருவதற்கு ஏதுவாக மாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரை மாநாட்டின் மேடை உச்சியில் முன்னாள் முதல்வர்களான அண்ணா மற்றும் எம்ஜிஆர் ஆகிய இருவரையும் வைத்துள்ளனர்.
விக்கிரவாண்டி மாநாடு மேடையில் பெரியார், அம்பேத்கர், காமராசர், அஞ்சலையம்மாள், வேலு நாச்சியார் ஆகிய 5 பேருக்கும் நடுவில் விஜய் இடம்பெற்றிருந்தார். இம்முறை கொள்கை தலைவர்களுக்கு பேனர் மட்டும் வைத்துவிட்டு, மாநாடு மேடை அண்ணா, எம்ஜிஆர் நடுவில் விஜய் இருப்பது போல் பேனர் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக திமுக மற்றும் அதிமுகவின் நிறுவனர்களை விஜய் தவெகவின் அடையாளமாக மாற்றி இருக்கிறார். கடந்த சில மாதங்களாக அண்ணாவின் பேச்சுகளை தொண்டர்கள் மத்தியில் பேசி வந்த விஜய், தற்போது நேரடியாக எம்ஜிஆரின் புகைப்படத்தையும் பயன்படுத்தி இருப்பது அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதேபோல் மதுரை மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள பல்வேறு பேனர்களில் விஜயகாந்தின் புகைப்படத்தையும் தவெக தொண்டர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர். முதன்முதலில் மதுரை தவெக மாநாடு விஜயகாந்தின் பிறந்தநாளான ஆகஸ்ட் 25ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இதன் மூலமாக விஜய் அதிமுகவின் இடத்தை நிரப்ப முயற்சித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஏற்கனவே எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரையும் பாஜகவின் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இனி வரும் காலங்களில் எம்ஜிஆரை தவெகவும் கையில் சொந்த கொண்டாட வாய்ப்புகள் உள்ளது. இந்த நிலையில் அண்ணா மற்றும் எம்ஜிஆர் ஆகிய இருவரையும் மேடையின் உச்சியில் வைத்தது ஏன் என்று தவெக நிர்வாகி சிடி நிர்மல் குமார் விளக்கம் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து நிர்மல் குமார் பேசுகையில், அண்ணா மற்றும் எம்ஜிஆர் இருவருமே பொதுவாக மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தலைவர்கள். அதனால் அவர்களின் புகைப்படங்களைப் பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. யாருக்கும் தனிப்பட்ட தலைவர்கள் கிடையாது. இங்கே அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் புகைப்படங்கள் உள்ளது. அனைவரும் மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர்கள். மக்கள் விரும்பும் தலைவர்கள் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications