மதுரையில் முதல்வர் புகைப்பட கண்காட்சி..சிறையை உற்றுப்பார்த்த வடிவேலு..செல்பி எடுத்த திமுகவினர்
மதுரை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை பயண கண்காட்சி மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது. 70 ஆண்டுகால பொது வாழக்கையில் முதல்வர் ஸ்டாலின் சந்தித்த சவால்கள், மக்கள் நலனுக்காக அவர் மேற்கொண்ட போராட்டங்கள் ஆகியவற்றை இன்றைய இளம் தலைமுறை தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு அரிய புகைப்படங்கள், தத்ரூப காட்சி வடிவமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு 'எங்கள் முதல்வன் எங்கள் பெருமை' என்ற தலைப்பில் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது. இதனை பல பிரபலங்களும் ஆர்வத்துடன் பார்வையிட்டு புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
சென்னையைப் போல மதுரையிலும் புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. மதுரை, நத்தம் சாலை மேனேந்தல் மைதானத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டு கால வாழ்க்கை பயணம் குறித்த பிரமாண்டமான புகைப்பட கண்காட்சியை அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில், மீனாட்சி கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார்.

முதல்வரின் வாழ்க்கை பயணம்
புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பி.மூர்த்தி,''சென்னைக்கு அடுத்து இங்கு கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. 10 நாட்களுக்கு இந்த கண்காட்சி நடைபெறும். காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் என்று கூறினார்.

70 ஆண்டு கால வாழ்க்கை
இதுவரை யாரும் பார்த்திராத பல அரிய புகைப்படங்கள் மற்றும் 70 ஆண்டுகால பொது வாழக்கையில் முதல்வர் சந்தித்த சவால்கள், மக்கள் நலனுக்காக அவர் மேற்கொண்ட போராட்டங்கள் ஆகியவற்றை இன்றைய இளம் தலைமுறை தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு அரிய புகைப்படங்கள். தத்ரூப காட்சி வடிவமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

வடிவேலு
சிறுவர்கள், முதல்வருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வசதியாக செல்பி மேடை உள்ளது. அரசியல் வாழ்வில் படிப்படியாக உயர்ந்ததை குறிக்கும் வகையில் 500க்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன என்று மூர்த்தி கூறினார். கண்காட்சியை நடிகர் வடிவேலு நேற்று மாலை வந்து பார்வையிட்டார். ஒவ்வொரு புகைப்படத்தையும் கவனித்து பார்த்து அது குறித்து தகவல்களை கேட்டறிந்தார்.

உற்று பார்த்த வடிவேலு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறையில் இருந்த காட்சியை பார்த்த வடிவேலு, அங்கு சிறிது நேரம் நின்று உற்றுப்பார்த்து, அவரது சிறைப்பாடுகள் தத்ரூபமாக இருப்பதாக தெரிவித்தார். மேலும், ஏராளமானோர் கண்காட்சியை பார்வையிட்டனர்.

நிர்வாகிகள் செல்பி
சென்னைக்கு சென்று கண்காட்சியை நேரில் பார்வையிட முடியாத திமுக தொண்டர்கள் பலரும் மதுரைக்கு படையெடுத்துள்ளனர்.தென் மாவட்டங்களை சேர்ந்த திமுக நிர்வாகிகள், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், மதுரை மாவட்ட செயலாளரும் எம்எல்ஏமான தளபதி, நிர்வாகிகள் செல்வம்,முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.












Click it and Unblock the Notifications