ஆவேசம் காட்டும் அதிமுக- பாஜக தலைகள்.. அமைதியாக ஒரே வரியில் பதிலளித்த எல்.முருகன்! கூட்டணி என்ன ஆகும்
மதுரை: சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்று மதுரையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் எல் முருகன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, காசி தமிழ்ச் சங்கமம் விழா உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்றது. இதற்கு மிகப் பெரியளவில் வரவேற்பு கிடைத்த நிலையில், அடுத்தகட்டமாக சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
குஜராத்தில் அடுத்த மாதம் நடக்கும் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்குத் தேவையான ஏற்பாடுகள் இப்போதே நடந்து வருகிறது. மேலும், பல இடங்களில் இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடந்து வருகிறது

எல் முருகன்
அதன்படி மதுரையில் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார். பிரதமர் நரேந்திர மோடியின் மன் கி பாத் இன்று ஒலிபரப்பான நிலையில், அதையும் எல் முருகன் அங்கு மக்களுடன் அமர்ந்து கேட்டார். அதன் பிறகு அங்கே பேசிய அவர், "2014ஆம் ஆண்டு முதலே பிரதமர் மோடி தனது மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களுடன் உரையாற்றி வருகிறார். இன்று கூட பிரதமர் தனது உரையில் ஊட்டியில் ஆம்புலன்ஸ் சேவை செய்வோர், பொள்ளாச்சியில் இளநீர் விற்கும் பெண்ணை பாராட்டியிருந்தார்.

சவுராஷ்டிரா தமிழ் சங்கமம்
அதேபோ குஜராத்தில் நடக்கும் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் குறித்து பிரதமர் மோடி அதில் பேசியிருந்தார். இப்போதும் கூடமதுரை, பரமக்குடி, சேலம், திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட நகரங்களில் சவுராஷ்டிரா மக்கள் வசித்து வருகின்றனர். தமிழ் சங்கமம் நடக்கும் சமயத்தில் தமிழ்நாட்டில் இருந்து பொதுமக்களைக் குஜராத்திற்கு அழைத்துச் செல்லவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். காசி தமிழ் சங்கமத்தைப் போல இதுவும் மிகப் பெரிய வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜி20 தலைமை
ஆன்மீகமும், சேவையும் தழைத்தோங்கும் ஒரு பூமியாகத் தமிழ்நாடு மாறி வருகிறது. நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டவர்களை நாம் பாதுகாக்க வேண்டும். நமது நாட்டின் வளர்ச்சி தான் நமது வளர்ச்சி. கடந்த 9 ஆண்டுகளில் நமது நாடு மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. ஜி20 உலக நாடுகளின் கூட்டமைப்புக்கு இந்தியா இப்போது தலைமை தாங்குகிறது. உலகிற்கு வழிகாட்டும் தலைவராகப் பிரதமர் மோடி உருவெடுத்துள்ளார். வளரும் நாடுகளுக்கு மட்டுமின்றி வளர்ந்த நாடுகளுக்கும் வழிகாட்டுகிறது.

பொருளாதாரம்
பிரதமர் செயல்பாடுகள் பொருளாதாரத்தை வளர்த்தெடுத்துள்ளது. நம்மை ஒரு காலத்தில் அடிமைப்படுத்திய நாட்டை பின்னுக்கு தள்ளி உலக பொருளாதாரத்தில் 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளோம். உக்ரைன் போர் சமயத்தில் அங்கே இருந்த 23 ஆயிரம் மாணவர்களை மிகவும் பாதுகாப்பாக இந்தியா அழைத்து வந்தோம். இப்படிப் பல நிகழ்வுகளைச் சொல்லலாம். இதேபோல அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா முன்னேறி வளர்ந்த நாடாக உருவெடுக்கும்.

அதிமுக பாஜக கூட்டணி
ராகுல் காந்தி விவகாரத்தைப் பொறுத்தவரை அவர் குறிப்பிட்ட சமூகத்தை இழிவாகப் பேசினார். இதன் காரணமாக நீதிமன்றம் அவருக்குத் தண்டனை கொடுத்தால் அவர் எம்பி பதவியை இழந்துள்ளார். இதற்கும் பாஜகவுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணியைப் பொறுத்தவரை, அதிமுக பாஜக கூட்டணி சமூகமாக இருக்கிறது. மாநில பாஜக தலைவரும் இதையே தான் சொல்லியுள்ளார். எங்கள் இலக்கு அடுத்த மக்களவை தேர்தல்தான். அதற்கு பூத் அளவில் கட்சியை வலிமைப்படுத்தும் பணி நடந்து வருகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications