முக்கியத்துவம் பெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை? தொடங்கி வைப்பது யார்?
மதுரை: மதுரையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையன்று நடக்க உள்ளது. ஏற்கனவே அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் காண ஆளுநர் ஆர்.என்.ரவி வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு போட்டியை யார் தொடங்கி வைக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் பாரம்பரிய முறைகளில் நடப்பது வழக்கம். நடப்பாண்டில் அவனியாபுரத்தில் வரும் 15ம் தேதியும், பாலமேட்டில் 16ம் தேதியும், அலங்காநல்லூரில் 17ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்க உள்ளன.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் பொறுப்பு மாவட்ட நிர்வாகமே எடுத்துக் கொண்டுள்ளது. இதனால் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கான விழா மேலை, பார்வையாளர் மேடை, தடுப்பு வேலிகள், சோதனை மையம், மாடுபிடி வீரர்களுக்கான சோதனை மையம் என அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி, பொதுமக்கள் பயன்படுத்தி தார் சாலையில் நடத்தப்படும் என்பதால், அங்கு வாடிவாசல் அமைக்கும் பணிகளில் பனியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வாடிவாசல் அமைக்கும் பணிகள் முடிவடைந்தாலும், தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் காண ஆளுநர் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
வழக்கமாக ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் விழா மேடையில் ஆளுங்கட்சியின் முக்கியத் தலைவர்களே நிரம்பி இருப்பார்கள். அதேபோல் கடந்த சில ஆண்டுகளாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ராகுல் காந்தி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வந்தனர். அதனால் இம்முறை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

யார் தொடங்கி வைப்பார்கள்?
இம்முறை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவுள்ள நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை யார் தொடக்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் ஆளுநர் ஆர்.என்.ரவி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காண வருவதாக கூறப்படுகிறது. இதுவரை மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைக்கவே வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.

ஆளுநருக்கு மரியாதை
இதனிடையே அமைச்சர் மூர்த்தி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை பார்வையிட்டுள்ளார். அவரிடம் ஆளுநர் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, ஆளுநர் ஆர்.என்.ரவி வருவதாக அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறப்படவில்லை. ஒருவேலை ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்தால், அவருக்கான மரியாதை அளிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும் பகுதிகளில் உள்ள 16 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications