கிரிக்கெட் போட்டியில் "பாகிஸ்தான் ஜிந்தாபாத்" கோஷம்.. இளைஞர் அடித்து கொலை.. கர்நாடகாவில் பதற்றம்
மங்களூரர்: கர்நாடகாவில் உள்ள மங்களூர் புறநகர்ப் பகுதியில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று முழக்கமிட்ட இளைஞரை 25க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் இளைஞர் கொல்லப்பட்ட நிலையில், போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடகாவின் முக்கிய நகரங்களில் ஒன்று மங்களூர். இங்குள்ள புறநகர்ப் பகுதியில் கடந்த ஏப்ரல் 27ம் தேதி உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடந்துள்ளது. அங்கு பத்ரா கல்லுர்டி கோயில் அருகே பிற்பகல் நேரத்தில் போட்டி நடந்துள்ளது. அப்போது தான் இந்தச் சம்பவம் நடந்ததாக நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம்
போட்டி நடந்த போது அந்த இளைஞர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று முழக்கமிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அங்கிருந்த சிலர் அவரை அடித்துள்ளனர். சுமார் 25 பேர் சேர்ந்து கொண்டு அந்த நபரைக் கட்டைகள், கற்களால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த அந்த நபருக்கு ரத்தப் போக்கு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 15 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும், விசாரணை தொடர்ந்து வருகிறது.
அமைச்சர் தகவல்
இது தொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா கூறுகையில், "கும்பலாகச் சேர்ந்து தாக்கியதில் ஒருவர் கொல்லப்பட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. உயிரிழந்த நபரை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகிறது. உள்ளூர் கிரிக்கெட் போட்டியின்போது அந்த நபர் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று முழக்கமிட்டுள்ளார். இதனால் சிலர் சேர்ந்து கொண்டு அவரை தாக்கியுள்ளனர். இதில் அவர் கொல்லப்பட்டார்.
இது தொடர்பாகத் தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணையைத் துரிதப்படுத்தினர். இந்த விவகாரத்தில் இதுவரை 10 முதல் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. அதேநேரம் இந்த நேரத்தில் நான் பொதுமக்களிடம் ஒரே ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன். அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுங்கள். அவசரப்பட வேண்டாம்.. விசாரணை நடந்து வருகிறது" என்றார்.
என்ன நடந்தது
இந்தச் சம்பவம் தொடர்பாக மங்களூர் நகரக் காவல் ஆணையர் அனுபம் அகர்வால் கூறுகையில், "கோயில் மைதானத்திற்கு அருகில் ஆணின் சடலம் இருப்பதாகத் தகவல் வந்தது. இதையடுத்து முதலில் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினோம்.. கடந்த ஏப்ரல் 28ம் தேதி நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், உயிரிழந்த நபரின் உடலில் பல காயங்கள் இருந்தது கண்டெடுக்கப்பட்டது. மேலும், உரிய நேரத்தில் மருத்துவச் சிகிச்சை இல்லாததே உயிரிழப்புக்குக் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டது" என்றார்.
மங்களூர் ரூரல் போலீஸ் நிலையத்தில் ஒருவர் அளித்த புகாரின் பெயரில் பாரதிய நியாய சன்ஹிதா, 2023 இன் பிரிவு 103(2)இன் கீழ் (கும்பல் வன்முறை) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாகச் சந்தேகத்தின் அடிப்படையில் 10 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது நடவடிக்கை
இது தொடர்பாக அனுபம் அகர்வால் மேலும் கூறுகையில், "குடுப்பு பகுதியைச் சேர்ந்த சச்சின் என்பவரை முக்கிய குற்றவாளியாக அடையாளம் கண்டுள்ளோம். அவரை ஏற்கனவே கைது செய்துவிட்டோம். கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் மரண தண்டனை கூட விதிக்கப்படும்" என்றார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்யத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள சிசிடிவி கேமரா, மொபைல் டேட்டா ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு வேண்டுகோள்
இந்தச் சம்பவம் குறித்து தட்சிணக் கன்னடா மாவட்ட பொறுப்பு அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் தனது ட்விட்டரில், "கிரிக்கெட் விளையாடும் போது, இரு பிரிவினருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்தே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஏற்கனவே சந்தேகத்தின் அடிப்படையில் சிலரைக் கைது செய்துள்ளோம். போலீஸ் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கிறது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications