மகாராஷ்டிராவை வாஷ் அவுட் செய்த மழை! நிலச்சரிவில் 4 பேர் பலி.. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மும்பை உள்ளிட்ட நகரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கலாபூர் பகுதியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக மும்பை உள்ளிட்ட நகரங்களில் வெயில் வாட்டி எடுத்த நிலையில் தற்போது பருவமழை தொடங்கியுள்ளது. வழக்கமாக மகாராஷ்டிரா மாநிலத்திற்கு தென் மேற்கு பருவமழை நீர் ஆதாரங்களை உருவாக்குகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக மும்பை உள்ளி்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பியுள்ளன. அதேபோல குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.

கனமழை காரணமாக மும்பை, தானே, ரெய்கார் மற்றும் பால்கர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், ராய்காட் மற்றும் சந்திராபூர் ஆகிய இரு மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ராய்காட் மற்றும் பால்கர்ம மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்திருக்கிறது. அதேபோல தானே, மும்பை மற்றும் ரத்னகிரிக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை ஆய்வு மையம் கொடுத்திருக்கிறது.
மேலும் ஞாயிற்றுக்கிழமை வரை ஒரு சில மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக மும்பையில் லோக்கல் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தண்டவாளங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து மக்களை காப்பாற்ற தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேசிய பேரிடர் மீட்டு அமைப்பு மேற்கொண்டுள்ளதாக மாநில நிர்வாகம் கூறியுள்ளது.
இந்நிலையில் தொடர் மழை காரணமாக ராய்காட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பகுதியில் சுமார் 46 வீடுகள் இருக்கின்றன. இதில் பழங்குடியின சமூகத்தினர் வசித்து வருகின்றனர். தொடர்ந்து பெய்த மழை காரணமாக இப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் மண்ணில் புதைந்திருக்கின்றன. இதிலிருந்து மக்களை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. தற்போது வரை 22 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 30 பேர் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இது குறித்து ராய்காட் மாவட்ட ஆட்சியர் யோகேஷ் மசே கூறுகையில், "இந்த சம்பவம் நள்ளிரவில் நடந்திருக்கிறது. தாசில்தாரை உள்ளடக்கிய மீட்பு குழு மக்களை மீட்டு வருகிறது. இந்த சம்பவம் நடைபெற்ற மலைப்பகுதிக்கு வரவேண்டும் எனில், குறைந்தது 2 மணி நேரம் ஆகும். இதுதான் தற்போது எங்களுக்கு இருக்கும் சவால்கள் என்று கூறியுள்ளார். தற்போது இடிபாடுகளில் சிக்கியுள்ள 30 பேரை காப்பாற்றுவதுதான் எங்களுக்கு மிகுந்த சவாலை ஏற்படுத்தியுள்ளது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications