கைகோர்த்த அதானி - அம்பானி நிறுவனங்கள்.. முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து.. மக்களுக்கு குட்நியூஸ்
மும்பை: தொழிலதிபர் கவுதம் அதானியின், அதானி டோட்டல் கியஸ் லிமிடெட் மற்றும் ஜியோ பிபி ஆகியவை இணைந்து நம் நாட்டில் எரிபொருள் சில்லறை விற்பனையை மேம்படுத்த ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனை நிலையங்களில் உயர் செயல்திறன் கொண்ட எரிபொருட்கள் ஒருங்கிணைக்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஒப்பந்தம் இரு நிறுவனங்களின் பலத்தையும் ஒன்றிணைத்து வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கம் கொண்டுள்ளது.

நம் நாட்டில் பிரபலமான தொழிலதிபர்களாக கவுதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோர் உள்ளனர். இவர்கள் 2 பேரும் பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் கவுதம் அதானியின் ‛அதானி டோட்டல் கியாஸ் லிமிடெட்’ மற்றும் முகேஷ் அம்பானியின் ஜியோ பிபி (Jio BP) ஆகிய நிறுவனங்கள் இணைந்து முக்கிய ஒப்பந்தத்தை செய்துள்ளன. இந்த ஜியோபிபி நிறுவனம் என்பது ‛ரிலையன்ஸின் பிபி மொபிலிட்டி லிமிடெட்’ நிறுவனத்தின் ஆபரேட்டிங் பிராண்ட் ஆகும்.
கவுதம் அதானியின் அதானி டோட்டல் கியாஸ் லிமிடெட் என்பது கியாஸ் வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனம் வீடுகள், தொழிலகங்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கியாஸ் சப்ளையை கொடுத்து வருகிறது. மறுபுறம் முகேஷ் அம்பானியின் ஜியோ பிபி நிறுவனங்கள் கியாஸ் மற்றும் ஆயில் விற்பனையை மேற்கொண்டு வருகிறது. இப்படியான சூழலில் இரு நிறுவனங்களும் முக்கிய ஒப்பந்தம் செய்துள்ளன.
இந்த ஒப்பந்தத்தின்படி ஜியோ-பிபியின் உயர் செயல்திறன் கொண்ட பெட்ரோல் மற்றும் டீசல், அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் நிறுவனத்தின் விற்பனை நிலையங்களில் கிடைக்கும். இந்த பணியை அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் நிறுவனம், டோட்டல் எனர்ஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது.
இந்நிறுவனம் இந்தியாவில் நகர எரிவாயு விநியோகம், அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு மற்றும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதிலும் ஈடுபட்டுள்ளது. ஜியோ-பிபி, ரிலையன்ஸ் பிபியின் ஒரு கூட்டு முயற்சி இதுவாகும். இது நம் நாட்டில் எரிபொருள் சில்லறை விற்பனை மற்றும் குறைந்த கார்பன் எரிபொருள் விற்பனையில் கவனம் செலுத்துகிறது.
ஜியோ-பிபி நிறுவனத்தின் சேர்மன் பெஹூரியா இது குறித்து கூறுகையில், "நாங்கள் இந்தியாவில் உயர்தர எரிபொருளை வழங்குவதில் உறுதியாக இருக்கிறோம். இந்த கூட்டு முயற்சியின் மூலம் இரு நிறுவனங்களின் அனுபவத்தையும், கட்டமைப்பையும் பயன்படுத்தி சிறந்த சேவையை வழங்க முடியும்" என்றார்.
அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பி.மங்கலானி கூறுகையில், "இந்த கூட்டு முயற்சி மூலம் இரு நிறுவனங்களும் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவோம்" என்றார்.
தற்போது அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் சுமார் 650 நிலையங்களையும், ஜியோ-பிபி சுமார் 2000 விற்பனை நிலையங்களையும் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் எரிபொருள் சில்லறை விற்பனையில் ஒரு புதிய அணுகுமுறையாகவும், வாடிக்கையாளர்களுக்கான சேவையை விரைவாக வழங்கும் முயற்சியாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனுபவத்தை மேம்படுத்தும் ஒரு முயற்சியாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications