இந்தியாவின் மிகப்பெரிய திட்டம்! அது என்ன தாராவி வளர்ச்சி திட்டம்? அதிரடி காட்டும் அதானி குழுமம்!
மும்பை: மும்பையில் உள்ள தாராவியில் மக்கள் தொகை அதிகம். ஏறக்குறைய 641 ஏக்கரில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் இங்கு வாழ்கின்றனர். தற்போது இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான கௌதம் அதானியின் தலைமையின் கீழ், இப்பகுதி மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி நகர்கிறது.
தாராவி மும்பையின் மையப்பகுதியில் ஒரு குடிசை பகுதி ஆகும். இந்தியாவின் மிகவும் முன்னேறிய வணிக மாவட்டமான பாந்த்ரா-குர்லா அருகே அமைந்து உள்ளது. பல வளர்ந்த நிறுவனங்களுக்கு அருகே உள்ள குட்டி குடிசை பகுதி ஆகும் இது.
இந்த பகுதியை முன்னேற்றுவதற்காக கொண்டு வரப்பட்டதே தாராவி வளர்ச்சி திட்டம். 2004 ஆம் ஆண்டில், மகாராஷ்டிர மாநில அரசாங்கம் தாராவியை மேம்படுத்தப்பட்ட நகர்ப்புற உள்கட்டமைப்புகளுடன் கூடிய உயரமான கட்டிடங்கள், குடியிருப்புகளை அமைக்கும் வகையில் இந்த திட்டத்தை கொண்டு வந்தது. இதற்காக 68,000 பேரை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. முக்கியமாக குடிசை பகுதி மக்கள் இடமாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

2004ல் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இங்கே உயரமான கட்டிடங்கள், வணிக வளாகங்கள் கட்ட முடிவு எடுக்கப்பட்டது. 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்கு முன்பு இங்கே வாழ்ந்தவர்கள்.. அதாவது இங்கே குடிசைப் பகுதிகள் இருந்ததற்கான ஆதாரத்துடன் குடியிருப்போருக்கு 300 சதுர அடி வீடுகள் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. 2000 முதல் 2011-ஆம் ஆண்டு வரை தாராவியில் குடியேறியவர்களுக்கு அவர்கள் குடியேறிய நிலத்தின் விலைக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
தாராவியில் அதானி குழுமத்தின் மறுசீரமைப்பு திட்டம்
அதானி குழுமத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான அதானி ரியாலிட்டி, தாராவியை முழுவதுமாக மாற்றி அமைப்பதற்கு 11 பில்லியன் டாலர் மதிப்பிலான மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொறுப்பேற்றுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களுக்கு நவீன வீடுகள் கட்டப்படும். மேலும் வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், உயர்தர அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள், மருத்துவமனைகள், மற்றும் பசுமையான இடங்கள் உருவாக்கப்படும். மும்பையின் முக்கிய பகுதிகளுடன் தாராவியை இணைக்கும் வகையில் போக்குவரத்து வசதிகளும் மேம்படுத்தப்படும்.
இந்த மறுசீரமைப்பு திட்டம், இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறையில் அதானி ரியாலிட்டியின் இருப்பை வலுப்படுத்தும். இந்த திட்டத்தின் மூலம் 14 பில்லியன் டாலர் வருவாயும், 3 பில்லியன் டாலர் லாபமும் ஈட்டப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அதானி ரியாலிட்டி, நகர்ப்புற மாற்றத்தில் முக்கிய சக்தியாக மாறும். ஏற்கனவே அதானி ரியாலிட்டி மும்பையில் பல முக்கிய அரசு ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது.
அதானி குழுமம், நகரத்திற்கு அருகில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும் அரபிக் கடலை ஒட்டி ஒரு பெரிய வணிக வளாகத்தையும் உருவாக்க திட்டமிட்டுள்ளது. தாராவி மறுசீரமைப்பு திட்டமே தற்போது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
தாராவியை மறுசீரமைப்பதன் மூலம், குடியிருப்பாளர்களுக்கு தூய்மையான வீடுகள், சுகாதார வசதிகள், சிறந்த கல்வி, வேலைவாய்ப்புகள் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய வாழ்க்கைத் தரம் கிடைக்கும். இதன் மூலம் நீண்ட கால பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும். அதானியின் இந்த திட்டம் ரியல் எஸ்டேட்டை தாண்டி, நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு அமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.
தாராவியின் பழங்கால பாரம்பரியத்தை பாதுகாத்து, அதன் உண்மையான திறனை வெளிக்கொணர நவீன நகர்ப்புற வளர்ச்சி கொள்கைகளுடன் இத்திட்டம் செயல்படும். இந்த திட்டம் வெற்றிகரமாக முடிந்தால், நிலையான மறுசீரமைப்புக்கான ஒரு முன்மாதிரியாக இது திகழும். தனியார் முதலீடு மற்றும் பொது நலன் ஆகியவை இணைந்து எவ்வாறு சமூகங்களை மேம்படுத்தும் மற்றும் நகரங்களை மாற்றும் என்பதை இது எடுத்துக்காட்டும்.












Click it and Unblock the Notifications