2 நாளில் 31 பேர் பலி.. அரசு மருத்துவமனை டீனை கழிவறை கழுவ வைத்த சிவசேனா எம்பி! பரவும் வீடியோ
மும்பை: மகாராஷ்டிராவில் 48 மணிநேரத்தில் அரசு மருத்துவமனையில் 31 பேர் வரை பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சிய ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் சிவசேனா எம்பி ஹேமந்த் பட்டீல், மருத்துவமனையின் டீனை கழிவறையை கழுவ செய்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் சிவசேனா கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. சிவசேனா கட்சியின் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக உள்ளார். துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார்.

இந்நிலையில் தான் மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் தொடர்ந்து நோயாளிகள் இறந்து வந்தனர். கடந்த மாதம் 30ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை மொத்தம் 31 நோயாளிகள் மருத்துவமனையில் பலியாகினர்.
இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நோயாளிகளின் இறப்புக்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே காரணம். இதுபற்றி அரசு விசாரணை நடத்தி கவனக்குறைவாக செயல்பட்டு வரும் டாக்டர்கள், நர்ஸ், ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் தான் இன்று சிவசேனா கட்சியை சேர்ந்த நான்டெட் தொகுதி எம்பி ஹேமந்த் பட்டீல் மருத்துவமனைக்கு திடீர் விசிட் செய்தார். அப்போது அவர் நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். மேலும் மருத்துவமனையில் உள்ள கழிவறைகளை அவர் பார்வையிட்டார். அப்போது அது சுத்தமின்றி இருந்தது. மேலும் தண்ணீர் வசதியின்றியும், பூட்டப்பட்டும் கழிவறை இருந்தது. இதனால் ஹேமந்த் பட்டீல் கடும் கோபம் அடைந்தார்.
இந்த வேளையில், ‛‛கழிவறைகளில் சின்ன கப் கூட வைக்க முடியாதா? தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க முடியதா? இதை செய்யாமல் கழிவறைகளை பயன்படுத்த கூடாது என மக்களை அதட்டுவது எப்படி சரியானதாக இருக்கும்?. இப்படி தான் உங்கள் வீட்டு கழிவறை உள்ளதா?'' என டாக்டர்கள் மற்றும் மருத்துவமனையின் பொறுப்பு டீன் எஸ்ஆர் வாகோடியை கடுமையாக திட்டினார். மேலும் முதல்வரிடம் கூறி உங்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய கூறுகிறேன் என கண்சிவந்தார்.
இதனால் டாக்டர்கள் மற்றும் பொறுப்பு டீன் எஸ்ஆர் வாகோடி ஆகியோர் விழிபிதுங்கி நின்றனர். மேலும் டீன் எஸ்ஆர் வாகோடியை அவர் மருத்துவமனையில் உள்ள கழிவறையை சுத்தம் செய்ய வைத்தார். எம்பி ஹேமந்த் பட்டீல் கழிவறைக்குள் தண்ணீரை பீய்ச்சி அடிக்க மற்றவர்கள் அனைவரும் சுற்றி நிற்க டீன் எஸ்ஆர் வகோடி வாரியல் பிடித்து கழிவறையை சுத்தம் செய்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
மேலும் இந்த ஆய்வு குறித்து எம்பி ஹேமந்த் பட்டீல் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது. ‛‛மருத்துவமனைகளை தூய்மையாக வைத்து கொள்ள அரசு பல கோடிகளை செலவழிக்கிறது. ஆனால் இங்குள்ள நிலையை பார்த்து நான் கவலைப்படுகிறேன். கழிவறை பல மாதங்களாக கழுவப்படாமல் உள்ளது. மருத்துவமனை வார்டுகளுக்குள் உள்ள கழிவறைகளில் தண்ணீர் வசதியின்றி கதவுகள் பூட்டப்பட்டுள்ளது. டீனின் அறையில் வாஷ்பேஷின் உடைந்துள்ளது. குழாயில் தண்ணீர் வரவில்லை'' எனக்கூறி ஆக்ரோஷமடைந்தார்.












Click it and Unblock the Notifications