Ajit Pawar: "அரசியல் சாணக்கியர்" சரத் பவாரையே அதிர வைத்தவர் அஜித் பவார்.. 2023ல் நடந்தது நினைவிருக்கா?
மும்பை: மகாராஷ்டிரத் துணை முதல்வரும் என்சிபி தலைவருமான அஜித் பவார் (Ajit Pawar) விமான விபத்தில் இன்று உயிரிழந்தார். இவர் 2023ல் யாருமே எதிர்ப்பாராக்காத வகையில் தனது மாமா அரசியல் சாணக்கியர் சரத் பவாருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருந்தார். அப்போது என்ன நடந்தது.. அஜித் பவார் என்ன செய்தார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
கடந்த 2023ல் மகாராஷ்டிர அரசியலில் யாருமே செய்யாத ஒரு விஷயத்தை அஜித் பவார் செய்து காட்டினார். தனது மாமா சரத் பவாருக்கு எதிராக அவர் போர்க்கொடி தூக்கினார். சுமார் 24 ஆண்டுகளாக என்சிபி கட்சியை நடத்தி வந்த சரத் பவாரிடம் இருந்து சத்தமே இல்லாமல் கட்சியைத் தன்வசப்படுத்தினார் அஜித் பவார்.

அஜித் பவார்
கட்சியின் அதிகாரப்பூர்வப் பெயரையும், சின்னத்தையும் தனதாக்கிக் கொண்டார். கடந்த 2023 ஜூலை 2ம் தேதி இது அரங்கேறியது. அஜித் பவார் உட்பட 9 மூத்த என்சிபி தலைவர்கள் அப்போதைய ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். அஜித் பவார் துணை முதலமைச்சரானார்.
இதற்கு முன்பு 2019ல் இதுபோல சரத் பவாரிடம் இருந்து கட்சியைத் தன்வசப்படுத்த அஜித் பவார் முயன்றார். ஆனால், அது தோல்வியில் முடிந்திருந்தது. மீண்டும் அதுபோல நடக்கக்கூடாது என்பதற்காக 2023ல் பக்காவாக பிளான் போட்டு காய்களை நகர்த்தினார். முன்கூட்டியே பெரும்பான்மை எம்எல்ஏக்களை தன்வசம் ஈர்த்தார். மொத்தமுள்ள 53 என்சிபி சட்டமன்ற உறுப்பினர்களில் 41 பேரின் ஆதரவைப் பெற்று, அவர் தனது பெரும்பான்மையை உறுதி செய்தார்.
சரத் பவாருக்கு கேள்வி
பிளவுக்கு பிறகு அவர் தனது மாமா சரத் பவார் தலைமையை நேரடியாகக் கேள்விக்குள்ளாக்கினார். சரத் பவாருக்கு வயதாகிவிட்டது என்பதைச் சுட்டிக்காட்டி, "நீங்கள் எப்போது நிறுத்தப் போகிறீர்கள்?" என்ற கேள்வியை எழுப்பினார். மேலும், புதிய தலைமைக்கு வாய்ப்பு அளிக்க வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், பொதுவெளியில் பிளவை ஏற்படுத்தும் முன்பே, அஜித் பவார் பிரிவு தாங்களே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அதைத் தொடர்ந்து பொதுவெளியில் பிளவு நடந்தது.
தேர்தல் ஆணையம்
அதன் பிறகு தேர்தல் ஆணையம் பெரும்பான்மை அஜித் பவார் வசம் இருப்பதால் 2024 பிப்ரவரியில், அஜித் பவாரின் பிரிவை "உண்மையான" தேசியவாத காங்கிரஸ் கட்சியாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. இதன் காரணமாக, கட்சியின் பெயரும், அதன் 'கடிகாரம்' சின்னமும் அவருக்கே வழங்கப்பட்டது. மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நார்வேகரும், அதே பிப்ரவரியில் அஜித் பிரிவின் சட்டமன்றப் பலத்தைச் சுட்டிக்காட்டி அதிகாரப்பூர்வத் தேசியவாத காங்கிரஸ் என அறிவித்தார்.
தேர்தல் அரசியல்
இருப்பினும் 2024 லோக்சபா தேர்தல்களில், அஜித் பவாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த தேர்தலில் சரத் பவாரின் பிரிவு 8 இடங்களைக் கைப்பற்றியது. ஆனால் அஜித் பவார் பிரிவுக்கு 1 இடம் மட்டுமே கிடைத்தது. எனினும், அதே 2024 சட்டமன்றத் தேர்தல்களில் அஜித் பவார் கம்பேக் கொடுத்தார். 41 இடங்களை வென்றதுடன், சரத் பவார் தரப்பைத் தோற்கடித்தார். மேலும், மகாராஷ்டிர அரசியலிலும் தனது முக்கியத்துவத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.
அரசியல் 'சாணக்கியர்' எனப் போற்றப்படும் சரத் பவாருக்கு எதிராகக் கலகம் செய்வது எல்லாம் சாதாரண விஷயம் இல்லை. ஆனால், அதையும் வெற்றிகரமாகச் செய்துவிட்டு எந்தவொரு சிக்கலும் இல்லாமல் கட்சியையும் தனதாக்கிக் கொண்டவர் தான் அஜித் பவார்.












Click it and Unblock the Notifications