ஓமிக்ரான் பீதி.. 7 நாளில் 3 கொரோனா டெஸ்ட்.. வெளிநாட்டு பயணிகளுக்கு மகாராஷ்டிராவில் கடும் கட்டுப்பாடு
மும்பை: ஓமிக்ரான் கொரோனா பரவலை முன்னிட்டு மகாராஷ்டிரா வரும் வெளிநாட்டு விமான பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஓமிக்ரான் கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுக்க பல நாடுகளில் பயண கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு வருகின்றன. பல நாடுகளில் கட்டாய நெகட்டிவ் சான்றிதழ், 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் அவசியம் என்ற கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் விதி இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் எல்லோருக்கும் 14 நாட்கள் கட்டாயமான தனிமைப்படுத்துதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

தனி இடம்
இவர்களுக்கு என்று அரசு தனியாக இடம் ஒதுக்கும். அங்குதான் இவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். இதற்கான கட்டணத்தை அவர்களே கொடுக்க வேண்டும். அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் இந்தியா வந்த 2வது நாள், 4வது நாள், 7வது நாள் கொரோனா சோதனை செய்யப்படும். இதில் எதிலாவது பாசிட்டிவ் வரும் நபர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவார்கள். அவர்களின் சாம்பிள் ஜீன் சோதனைக்கு உள்ளாக்கப்படும்.

நெகட்டிவ்
நெகட்டிவ் வரும் நபர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் முடியும் வரை வெளியே வர முடியாது. அனைத்து வெளிநாட்டு பயணிகளும் தாங்கள் கடந்த 15 நாட்களில் பயணித்த இடங்கள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும். இது மகாராஷ்டிராவில் இமிக்ரேஷன் அதிகாரிகள் மூலம் சோதிக்கப்படும். இதில் பொய்யான தகவல் தரும் நபர்கள் மீது இந்திய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மகாராஷ்டிராவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிநாட்டு பயணி
அதேபோல் இது தவிர்த்து 12 ரிஸ்க் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. யு.கே, தென்னாப்பிரிக்கா, பிரேசில், வங்கதேசம், போட்ஸ்வானா, சீனா, மொரிஷியஸ், நியூசிலாந்து. ஜிம்பாபே, சிங்கப்பூர், ஹாங்காங், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து வரும் நபர்கள் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். இவர்களுக்கு விமான நிலையத்திலேயே கொரோனா டெஸ்ட் செய்யப்படும்.
Recommended Video

பாசிட்டிவ்
அதில் பாசிட்டிவ் வரும் நபர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதோடு கனெக்டிங் விமானம் காரணமாக மகாராஷ்டிரா வரும் நபர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவர்களுக்கும் கொரோனா சோதனை செய்யப்படும் என்று மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. ஓமிக்ரான் கொரோனா பரவலை முன்னிட்டு மகாராஷ்டிராவில் விதிகள் மிக கடுமையாக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications