ஒரு மழையில் பாஜகவை கரைத்த அரசியல் சாணக்கியர்.. அமித் ஷாவையே அதிர வைத்த சரத் பவார்.. மறக்க முடியுமா?
மும்பை: இந்திய அரசியலின் ஸ்டேட்ஸ்மேன்களில் ஒருவர்.. பழைய பேட்ஜ் அரசியல்வாதி.. அனுபவசாலி என்று பார்க்கப்படும் சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
நிகழ்கால அரசியல் ராஜதந்திரவாதிகளில் ஒருவரும்.. மகாராஷ்டிராவில் எதிர்பாராத அரசியல் கூட்டணியை உருவாக்கி கிட்டத்தட்ட 3 வருடங்கள் பாஜக கண்களில் விரலை விட்டு ஆட்டிய சாணக்கியருமான மூத்த அரசியல் தலைவர்தான் சரத் பவார்.
மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணியை முறித்து.. அங்கே பாஜக அல்லாத காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா கூட்டணி ஆட்சியை அமைக்க மிக முக்கிய காரணமாக இருந்தவர் சரத் பவார். 2019ல் அவர் நிகழ்த்திய அரசியல் ஆட்டம் தேசிய அளவில் கவனிக்கப்பட்டது.
தேர்தல் சமயத்தில் நடந்தது என்ன?

2019க்கு ஒரு சின்ன பிளாஷ்பேக்..
2019 மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு வரை கூட சரத் பவார் அரசியலில் நீடிப்பாரா? பாஜக என்ற மிகப்பெரிய பிம்பத்திற்கு முன் அவர் தாக்கு பிடிப்பாரா? என்று கேள்விகள் எழுந்து வந்தன. 2019 லோக்சபா தேர்தல் தோல்வி காரணமாக இந்த கேள்விகள் நிலவி வந்தன. ஆனால் அதை எல்லாம் குறித்து கவலைப்படாமல் தன்னுடைய அரசியல் வியூகங்கள் மிக தீவிரமாக கவனம் செலுத்தி தேர்தல் பணிகளை செய்து வந்தார் சரத் பவார்.
காங்கிரஸ் போல அல்லாமல்.. அவர் எங்குமே பாஜகவை குறித்து கவலைப்படவில்லை. தேர்தல் சமயத்தில் எந்த இடத்திலும் பெரிதாக பாஜக பற்றி அவர் பேசவே இல்லை. கூட்டணி பேச்சுவார்த்தையின் போதும், பிரச்சாரத்தின் போதும் அவர் பெரிதாக பாஜகவை பற்றி கவலைப்படாமல் தன்னுடைய பணிகளை மட்டும் செய்து வந்தார்.
பொதுவாக கார்ப்பரேட் அலுவலகங்களில் stick to basics என்று ஒரு விதியை குறிப்பிடுவார்கள். உங்களால் பெரிய விஷயங்களை செய்ய முடியவில்லை என்றால் அவசியமான சிறிய விஷயங்களை செய்து முடியுங்கள்.
அடிப்படை விஷயங்களில் சரியாக இருங்கள். அதற்கு பின் நேரம் கிடைக்கும் போது பெரிய விஷயங்களை கவனிக்கலாம் என்பார்கள். அப்படித்தான் சரத் பவாரும், பாஜகவை வீழ்த்துவது குறித்து கவலைப்படாமல், 45 - 55 இடங்களை வெல்ல மட்டும் குறி வைத்து களமிறங்கினார். அதேபோல் அந்த 2019 சட்டசபை தேர்தலில் முறையாக பணிகளை 53 இடங்களில் வெற்றியும் பெற்றார்.
அதன்பின்தான் பெரிய விஷயமான பாஜகவை நோக்கி தன் பார்வையை திருப்பினார். ஆனால் இதற்கு பின்பும் கூட சரத் பவார் அவசரப்படவில்லை. தோனி போல 40வது ஓவரில் கூட டென்சன் ஆகாமல்.. கூலாக சரத் பவார் டொக் வைத்து ஆடிக்கொண்டு இருந்தார்.
சிவசேனா, பாஜகவின் உறவு மொத்தமாக முறியும் வரை காத்து இருந்தார். உத்தவ் தாக்ரேவிற்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை.. கண்டிப்பாக அவர்கள் இருவரும் சேர மாட்டார்கள் என்பது உறுதியான பின்தான் சரத் பவார் களமிறங்கவே தொடங்கினார்.
தேசியவாத தலைவர் சரத் பவார் சிவசேனா அல்லது பாஜகவிற்கு ஆதரவு அளிப்பார் என்றுதான் எல்லோரும் பேசினார்கள். ஆனால் சரத் பவார் அப்படி எதையும் செய்து கெட்ட பெயர் எடுக்கவில்லை . மிக கவனமாக யாருக்குமே ஆதரவு அளிக்காமல் தனியாக இருந்தார். நாங்கள் எதிர்கட்சியாகவே இருப்போம் என்று உறுதியாக எந்த ஆசையையும் வெளிக்காட்டாமல் பேசினார்.
அவரின் அரசியல் முதிர்ச்சி மற்றும் சாணக்கியத்தனம் இரண்டும்தான் இதற்கு காரணம். சிவசேனாவுடன் கூட்டணி வைத்திருந்தால், கர்நாடகாவில் மஜதவிற்கு நேர்ந்தது போல ஒரு வருடத்தில் ஆட்சி கவிழ்ந்து இருக்கும். பாஜகவுடன் கூட்டணி வைத்து இருந்தால், தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் கோபம் கொண்டு இருப்பார்கள். இரண்டு விஷயத்தையும் சரத் பவார் தவிர்த்து வந்தார்.
சிவசேனா - பாஜக கூட்டணி கண்டிப்பாக உடையும். அதுவரை பொறுத்திருக்கலாம். நாமாக போய் ஆதரவு தர கூடாது. அவர்களாக வர வேண்டும் என்று காத்து இருந்தார். களத்தில் முக்கியமான கட்டத்தில் கூல் கேப்டனாக இருந்தும், சிவசேனா, பாஜக இரண்டு கட்சிக்கும் டென்ஷன் ஏற்றினார்.
எப்போதும் அமித் ஷா என்ன முடிவு எடுப்பார் என்றுதான் தேசிய அரசியல் உற்றுநோக்கும். ஆனால் இப்போது அமித் ஷாவே, சரத் பவார் என்ன முடிவு எடுப்பார்? யாருடன் கூட்டணி வைப்பார் என்று கவனிக்க தொடங்கிவிட்டார். இதுதான் சரத் பவாரின் அரசியல் முயற்சிக்கு காரணம்.
விளைவு கடைசியில் சிவசேனா தானாக இறங்கி வந்து.. பாஜகவுடன் உறவை முறித்து காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் மெகா கூட்டணி அமைக்க முடிவு செய்ததது. இந்த கூட்டணி அமைக்க அப்போது காரணமாக இருந்தவர் சரத் பவார்! அதன்பின் கிட்டத்தட்ட 3 வருடம் ஆட்சி முறியாமல் இருக்கவும் இவரே காரணமாக இருந்தார் .
அப்போது இவருடைய அண்ணன் மகன் அஜித் பவார் - பாஜகவுடன் கூட்டணி வைத்து தேவேந்திர பட்நாவீசை முதல்வராக பதவி ஏற்க ஆதரவு கொடுத்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது துணை முதல்வராக அஜித் பவார் பதவி ஏற்றுக்கொண்டார். அதிகாலையில் பதவி ஏற்பு நடந்து சில மணி நேரங்களில் துணை முதல்வர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்து ட்விஸ்ட் கொடுத்தார்.
அஜித் பவாரை வைத்து சரத் பவார் ஆடிய கேம் இது.. பாஜகவை சீண்டி அவர் விளையாடி பார்த்து இருக்கிறார்... தனது அண்ணன் மகனை வைத்து சரத் பவார் பாஜகவிற்கு ஆசை காட்டி ஏமாற்றி உள்ளார் என்றெல்லாம் அப்போதே செய்திகள் வந்தன. இதை சிலர் உண்மை என்றும் அப்போது கூறினார். அது உண்மையா இல்லையா என்பது இப்போது வரை பரம ரகசியம்தான்.
அந்த அளவிற்கு அரசியல் ராஜதந்திரம் மிக்கவர் சரத் பவார். 30 வருடத்திற்கும் மேலாக அரசியலில் கற்ற பாடங்களை எல்லாம் அந்த மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் சமயத்தில் துல்லியமாக வெளிப்படுத்தி கவனம் ஈர்த்தார் சரத் பவார்.
2019 லோக்சபாதேர்தலும் - ஒரு மழையும்:
சரத் பவாரின் அரசியல் தீரத்திற்கு இன்னொரு எடுத்துக்காட்டும் கூறலாம்,
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கு முன்பாக 2019 லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து வரிசையாக பலர் வெளியேறினார்கள். முக்கிய உறுப்பினர்கள் பலர் கட்சிக்குள் பெரிய அளவில் முறைகேடு நடக்கிறது என்று புகார் கூறி கட்சியை விட்டு வெளியேறினார்கள்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினர் உதயன்ராஜே போஸ்லே போன்றவர்கள் பாஜகவில் இணைந்தார்.
தன்னுடைய சத்தாரா தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு உதயன்ராஜே போஸ்லே பாஜகவில் இணைந்தார். உதயன்ராஜே போஸ்லே பாஜகவில் இணைந்தது தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அதிர்ச்சி அளித்தது. ஏனென்றால் மாரத்தா அரசின் 13வது சத்திரபதியாக உதயன்ராஜே போஸ்லேதான் முடி சூடி இருந்தார்.
இதனால் அவருக்கு மகாராஷ்டிராவில் மக்கள் செல்வாக்கு அதிகமாக இருந்தது. இவர் பாஜகவில் இணைந்தது தேசியவாத காங்கிரஸ் கட்சியை அந்த பகுதியில் மொத்தமாக முடக்கியது. அதோடு இந்தமுறை அதே சத்தாரா தொகுதியில் உதயன்ராஜே போஸ்லே பாஜக சார்பாக நின்றார்.
தேசியவாத காங்கிரஸ் சார்பாக அங்கு ஸ்ரீனிவாஸ் பாட்டீல் நின்றார். 2019 சட்டசபை தேர்தல் பிரச்சாரம் மொத்தமும் மகாராஷ்டிராவில் பெரும்பாலான இடங்களில் உதயன்ராஜே போஸ்லேவை வைத்துதான் உருவாக்கப்பட்டது. தேசியவாத காங்கிரசுக்கு எதிராக பாஜக இவரை பெரிய அளவில் பயன்படுத்தியது.
தேசியவாத காங்கிரஸ் மிக மோசமாக தோற்க போகிறது. உதயன்ராஜே போஸ்லே பாஜகவில் இணைந்ததே அதன் தொடக்கம் என்று கூட பிரச்சாரங்கள் செய்யப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருக்கும் பலரும் கூட இதே கருத்தைதான் சொன்னார்கள். ஆனால் அன்று அந்த ஒரு நாள் வந்தது.. மகாராஷ்டிரா அரசியல் மொத்தமாக அன்று மாலை மாறியது.

எல்லோரும் பாஜகவின் உதயன்ராஜே போஸ்லேதான் வெல்வார் என்று உறுதியாக நம்பிய போதுதான் சரத் பவார் 2019 அக்டோபர் 19ம் மாலை தன்னுடைய பிரச்சாரத்தை சத்தாரா தொகுதியில் மேற்கொண்டார். உதயன்ராஜே போஸ்லே குறித்தும் பாஜக குறித்தும் மாறி மாறி பேசினார்.
சரியாக அப்போது மழை பெய்ய துவங்கியது. கட்சி உறுப்பினர்கள் எல்லாம் எழுந்து செல்ல முயன்ற போது, கொஞ்சமும் அசையாமல், கெத்தாக மழையில் நின்றபடியே சரத் பவார் பிரச்சாரம் செய்தார். மழையில் கலைந்த கூட்டம் எல்லாம் மீண்டும் வந்தது. கூட்டம் மட்டுமல்ல ஓட்டும்தான். அவரின் அந்த பேச்சு, கடைசி நாள் தேர்தல் பிரச்சாரத்தை புரட்டிப்போட்டது.
அந்த தேர்தலில் பாஜகவின் உதயன்ராஜே போஸ்லே படுதோல்வி அடைந்தார்.. அதோடு தேசியவாத காங்கிரஸ் 53 இடங்களிலும் அந்த தேர்தலில் வென்றது. இதற்கு எல்லாம் காரணம் சரத் பவார்தான் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். எல்லோரும் அவரின் அரசியல் முடிந்துவிட்டது என்று சொன்ன போதும் அவர் தனது பணியை மேற்கொண்டார். மழையில் கூட கட்சிக்காக பிரச்சாரம் செய்தார்.. அந்த தேர்தலில் வென்றும் காட்டினார்.
வீழ்த்த முடியாத பாஜகவை.. பாஜகவின் கோட்டையிலேயே.. கொட்டும் மழையில் வீழ்த்திய அவரிடம் ராகுல் காந்தி தொடங்கி சோனியா காந்தி வரை கற்க வேண்டிய அரசியல் பாடம் நிறைய இருக்கிறது...
மகாராஷ்டிராவில் இவர் உருவாக்கிய மெகா கூட்டணி முறிந்து ஆட்சி மாறி இருக்கலாம்.. ஆனால் அரசியல் சாணக்கியர் என்று அழைக்கப்பட்ட அமித் ஷாவையே அப்போது திக்கி தண்ணீர் குடிக்க வைத்தவர் அதி சாணக்கியர்தான் இந்த சரத் பவார்!












Click it and Unblock the Notifications