உத்தவ் தாக்கரே ஷாக்! ஏக்நாத் ஷிண்டேதான் உண்மையான சிவசேனா: மகாராஷ்டிரா சபாநாயகர் பரபர தீர்ப்பு!
மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலானதுதான் உண்மையான சிவசேனா என 54 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நார்வேகர் பரபரப்பான தீர்ப்பு வழங்கி உள்ளார். இது முன்னாள் முதல்வரும் சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேவின் மகனுமாகிய உத்தவ் தாக்கரேவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
2022-ம் ஆண்டு ஜூன் 21-ந் தேதி அப்போதைய மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். இதனையடுத்து உடனடியாக சட்டசபை சிவசேனா குழு தலைவர் பதவியில் இருந்து ஏக்நாத் ஷிண்டே நீக்கப்பட்டு அஜய் சவுத்ரியை நியமித்தது உத்தவ் தாக்கரே தரப்பு. அதேபோல கட்சியின் புதிய கொறடாவாக சுனில் பிரபுவையும் உத்தவ் தாக்கரே தரப்பு நியமித்தது. ஆனால் சட்டசபை சிவசேனா குழு தலைவராக ஏக்நாத் ஷிண்டே தொடர்ந்து நீடிப்பார் எனவும் சிவசேனா புதிய கொறடாவாக பரத்ஷெட் கோகாவாலே நியமிக்கப்படுவதாகவும் ஏக்நாத் ஷிண்டே அதிருப்தி கோஷ்டி தீர்மானம் நிறைவேற்றியது.

54 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் கோரி மனு: இதனைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே தரப்பின் கொறடா சுனில் பிரபு கூட்டிய எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஏக்நாத் ஷிண்டே உட்பட 16 எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை. ஆகையால் இந்த 16 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உத்தவ் தாக்கரே தரப்பு சபாநாயகரிடம் மனு கொடுத்தது. இதன் பின்னர் ஏக்நாத் ஷிண்டே தரப்பின் மேலும் 22 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் உத்தவ் தாகக்ரே தரப்பு மனு கொடுத்தது. 3-வது முறையாக மேலும் 2 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தியது உத்தவ் தாக்கரே தரப்பு. மொத்தமாக ஷிண்டே தலைமையிலான கோஷ்டியில் இருந்த 40 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரியது உத்தவ் தாக்கரே தரப்பு. இதனைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே தலைமையிலான 14 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தியது ஏக்நாத் ஷிண்டே தரப்பு. மொத்தமாக 54 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் கோரிக்கை சபாநாயகர் ராகுல் நார்வேகர் முன்பாக வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக சபாநாயகர் எந்த முடிவும் எடுக்காத நிலையில் உச்சநீதிமன்றத்தில் இருதரப்பும் வழக்கு தொடர்ந்தன. உச்சநீதிமன்றத்தின் கடும் அதிருப்தி, எச்சரிக்கைக்கு பின்னர் சபாநாயகர் ஒருவழியாக 54 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் குறித்து விசாரணை நடத்தினார்.
இந்த விவகாரத்தில் இன்று சபாநாயகர் ராகுல் நார்வேகர் வழங்கிய தீர்ப்பின் சில முக்கிய அம்சங்கள்:
- மகாராஷ்டிரா சட்டசபை சிவசேனா குழு தலைவர் பதவியில் இருந்து ஏக்நாத் ஷிண்டேவை நீக்க உத்தவ் தாக்கரேவுக்கு அதிகாரம் இல்லை
- முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலானதுதான் உண்மையான சிவசேனா
- பரத்ஷெட் கோகாவாலேவை கொறடாவாக ஏக்நாத் ஷிண்டே தரப்பு நியமித்ததும் செல்லும்.
- உத்தவ் தாக்கரேவின் கொறடா சுனில் பிரபுவுக்கு எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக் கூட்ட எந்த அதிகாரமும் இல்லை.
- 2018-ம் ஆண்டு சிவசேனாவின் திருத்தப்பட்ட கட்சி விதிகள் தேர்தல் ஆணையத்தில் இடம் பெறவும் இல்லை.
- சிவசேனா கட்சி விதிகள் அனைத்தும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சாதகமாக இருக்கிறது.
மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நார்வேகரின் இந்த தீர்ப்பு முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு மிகப் பெரும் பின்னடைவாகும். ஏற்கனவே தேர்தல் ஆணையமும் உத்தவ் தாக்கரே தரப்புக்கு எதிராக தீர்ப்பு அளித்து ஏக்நாத் ஷிண்டேவை உண்மையான சிவசேனாவாக அங்கீகரித்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications