‛48 ஓட்டில் மாறிய வெற்றி’.. செல்போனால் EVM ஹேக்? ஓடிபி குழப்பத்தால் மும்பை தேர்தல் அதிகாரி விளக்கம்
மும்பை: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மும்பை வடமேற்கு தொகுதியில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு வேட்பாளர் ரவீந்தர தத்தாராம் 48 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.இந்நிலையில் தான் செல்போனை மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் இணைத்து முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பான புகார் எழுந்துள்ள நிலையில் தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் 240 தொகுதிகளில் வென்ற பாஜக தனது கூட்டணி கட்சிகளின் 52 எம்பிக்கள் உதவியுடன் மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளது. 3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராகி உள்ளார்.

இந்நிலையில் தான் தேர்தலில் ‛இந்தியா' கூட்டணி கட்சிகள் 234 தொகுதிகளை வென்றுள்ளன. இருப்பினும் கூட தொடர்ந்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மீது எதிர்க்கட்சிகள் சந்தேகம் கிளப்பி வருகின்றன. இன்று கூட ராகுல் காந்தி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் என்பது கருப்பு பெட்டி எனக்கூறி சந்தேகம் கிளப்பி உள்ளது.
இதற்கிடையே தான் மகாராஷ்டிராவில் மும்பை வடமேற்கு தொகுதியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அதாவது மும்பை வடமேற்கு தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசனோ சார்பில் ரவீந்தர் வைக்கர் போட்டியிட்டார். ‛இந்தியா' கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (யுபிடி) சார்பில் அமோல் கஜனன் கீர்த்திகர் களமிறங்கினார். ஓட்டு எண்ணிக்கை முடிவில் இந்த தேர்தலில் ஷிண்டே சிவசேனா வேட்பாளர் ரவீந்தர் வைக்கர் 48 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இத்தகைய சூழலில் தான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து முறைகேடு நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக குறிப்பிட்ட செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ‛‛கடந்த ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இந்த வேளையில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தை திறப்பதற்கான ஓடிபி என்பது வென்ற வேட்பாளர் ரவீந்திர வைகரின் உறவினர் மங்கேஷ் பாண்டில்கர் செல்போனுக்கு சென்றுள்ளது. இதுதொடர்பாக மங்கேஷ் பாண்டில்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது'' எனக்கூறப்பட்டுள்ளது. இதனை வைத்து அரசியல் கட்சி தலைவர்களும் சந்தேகம் கிளப்பி உள்ளனர்.
இந்நிலையில் தான் இந்த குற்றச்சாட்டை மும்பை வடமேற்கு லோக்சபா தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியான வந்தனா சூரியவன்ஷி மறுப்பு தெரிவித்தார். இதுபற்றி அவர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‛‛மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் என்பது தனித்த அமைப்பாகும். அதில் வயர் மற்றும் வயர்லெஸ் சாதனங்களை இணைத்து கூடுதலாக பயன்படுத்த முடியாது. மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை திறக்க தேவையான ஓடிபி செல்போனுக்கு வரும் என்பது புரளி. ஏனென்றால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை திறக்க எந்த ஓடிபியும் தேவையில்லை. இதுதொடர்பான தவறான தகவல்கள் பரப்புவோருக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications