'கண்ணீர் வெங்காயம்'.. 512 கிலோ வெறும் 2 ரூபாய்க்கு விற்பனை.. தற்கொலைதான் ஒரே வழி.. கதறும் விவசாயிகள்
கடந்த டிசம்பரில் இந்த சந்தைக்கு சுமார் 15,000 குவிண்டால் வெங்காயம் வரத்து இருந்தபோது ஒரு குவிண்டால் ரூ.1,850க்கு விற்பனையானது.
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் வெங்காய விளைச்சல் அதிகரித்துள்ளதால் சந்தைகளில் வெங்காயம் பெரும் அளவில் தேங்கியுள்ளது. இந்நிலையில் 512 கிலோ வெங்காயம் வெறும் 2 ரூபாய்க்கு மட்டுமே ஏலம் போயுள்ளதாக விவசாயி ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வெங்காய உற்பத்தியில் மிக முக்கிய பங்கு வகிக்கும் மாநிலம் மகாராஷ்டிரா. இம்மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டால் வெங்காய ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும். எனவே நாடு முழுவதும் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு அதிகரிக்கும். விலையும் உயரும். ஆனால் கடந்த சில மாதங்களாக வானிலை சீராக இருப்பதால் விவசாயமும் செழுமையாக இருந்திருக்கிறது. எனவே வெங்காயம் அதிக அளவில் உற்பத்தியாகியுள்ளது.
இப்படி அறுவடை செய்யப்பட்ட வெங்காயங்கள் அனைத்தும் சோலாப்பூர் வேளாண் உற்பத்தி சந்தைக்கு கொண்டு வரப்பட்டு அங்கு ஏலம் விடப்படும். பெரும்பாலான வணிகர்கள் விவசாயிகளின் விளை நிலத்திற்கே சென்று விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு வருவார்கள். அப்படிதான் சோலாப்பூர் மாவட்டத்தின் போர்கான் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திர துக்காராம் சவானின் வெங்காயமும் சந்தைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஒரு ரூபாய்க்கு விற்பனை
58 வயதான விவசாயி சவான் தனக்கு சொந்தமான நிலங்களில் வெங்காயத்தை பயிரிட்டு வந்திருக்கிறார். எதிர்பார்த்த அளவில் மழை இல்லாவிட்டாலும் கூட பயிர்கள் வறட்சியால் பாதிக்கப்படாமல் அறுவடையாகின. இந்த முறை மொத்தமாக சுமார் 512 வெங்காயம் அறுவடையாகியுள்ளது. சாவின் கிராமத்திலிருந்து 70 கி.மீ தொலைவில் உள்ள சந்தைக்கு வந்து சேர்ந்த வெங்காயம் ஏலத்தில் விடப்பட்டுள்ளது. இதில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.1க்கு விற்பனையாகியுள்ளது. இதனை விவசாயி சவான் எதிர்பார்க்கவில்லை. சரி கிடைத்தவரை லாபம் என்று பார்த்திருக்கிறார்.

வெறும் 2 ரூபாய்
மொத்தமாக 512 கிலோவுக்கு 512 ரூபாயும், வெங்காயம் கொண்டு வந்ததற்கான வண்டி கூலி ரூ.509.51 கழிக்கப்பட்டு ரூ.2.49 பைசா பணம் சவானுக்கு சேர வேண்டும் என்று ஏலம் எடுத்தவர் கூறியுள்ளார். பின்னர் கடைசியாக சவானுக்கு ரூ.2 செக் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த பணத்தையும் உடனடியாக எடுக்க முடியாது. 45 நாட்கள் வரை இதற்காக காத்திருக்க வேண்டும். சாதாரண ஆனியன் ஃபிளேவர் சிப்ஸ் கூட ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. இப்படி இருக்கையில் 512 கிலோ வெங்காயம் வெறும் ரூ.2க்கு விற்பனை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செலவு மட்டும் ரூ.40 ஆயிரம்
இது குறித்து விவசாயி சவான் கூறுகையில், "கடந்த 3-4 ஆண்டுகளாக விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலை சுமார் 2 மடங்கு அதிகரித்துள்ளது. இன்று சந்தைக்கு கொண்டு வந்துள்ள 512 கிலோ வெங்காயத்தை விளைவிக்க நான் ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்துள்ளேன்" என்று கூறியுள்ளார். ஆனால் சந்தையில் வெங்காயத்தை ஏலம் எடுத்த வணிகர், "இந்த வெங்காயம் தரமற்றதாக இருக்கிறது. எனவேதான் இவ்வளவு குறைந்த விலையில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.மகாராஷ்டிரா முழுவதும் இந்த பிரச்னை நீடித்து வருகிறது.

மாநிலம் முழுவதும்
வெங்காயத்தை விளைவித்த அனைத்து விவசாயிகளும் நியாயமான விலை கிடைக்காததால் அதிருப்தியில் இருக்கின்றனர். கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 70% அளவுக்கு வெங்காயத்தின் கொள்முதல் விலை குறைந்துள்ளது. கடந்த டிசம்பரில் இந்த சந்தைக்கு சுமார் 15,000 குவிண்டால் வெங்காயம் வரத்து இருந்தபோது ஒரு குவிண்டால் ரூ.1,850க்கு விற்பனையானது. ஆனால், தற்போது வரத்து 30,000 குவிண்டாலாக அதிகரித்துள்ளதால் குவிண்டால் வெங்காயம் ரூ.550க்கு மட்டுமே விற்பனையாகிறது.

கடிதம்
மாநிலம் முழுவதும் இதே நிலை நீடித்துள்ளதால் விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கின்றனர். சில நாட்களுக்கு முன்னர் இந்த பிரச்னையை குறிப்பிட்டு போர்கான் கிராம பஞ்சாயத்து சார்பில் மாநில அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், "விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லையெனில் கிராம விவசாயிகள் அனைவரும் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை" என்று கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications