"இந்தியா" கூட்டணி பாஜகவை தோற்கடிக்கும்.. தொகுதி பங்கீடு குறித்து பிரஸ்மீட்டில் அழுத்தமாக சொன்ன ராகுல்
மும்பை: "இந்தியா" அணி தொகுதி பங்கீடு சுமூகமாக முடிவடையும் என்றும் 'இந்தியா கூட்டணி' பாஜகவை வீழ்த்தும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மும்பையில் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு பேட்டி அளிக்கும் போது கூறினார்.
நாட்டில் லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்காக பாஜக ஒருபக்கம் தீவிரமாக தயாராகி வருகிறது. மறு பக்கம் காங்கிரஸ் - திமுக ஆகியவை சேர்ந்து பிரம்மாண்டமாக இந்தியா என்ற கூட்டணியை தேசிய அளவில் உருவாக்கி உள்ளது. இந்த கூட்டணிக்கான ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கிட்டத்தட்ட இதுவரை 26 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்று உள்ளன.

லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக 28 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தக் கூட்டணியின் 3-வது கூட்டம் 2 நாட்களாக நேற்றம் இன்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெறுகிறது. இன்று நடந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி உட்பட பல தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கூட்டம் முடிந்த பிறகு ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் இடையே நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியா அணி தொகுதி பங்கீடு சுமூகமாக முடிவடையும். பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதே இந்தியா கூட்டணியின் நோக்கம். இந்தியா கூட்டணி நிச்சயம் பாஜகவை தோற்கடிக்கும்.
எங்கள் தலைவர்களுடன் நிறைய வேறுபாடுகள் இருந்தன. அப்படி இருந்தாலும், இந்த கூட்டத்தில் தொடர் ஆலோசனை நடைபெற்றது. இதில், தலைவர்கள் இடையேயான வேறுபாடுகள் பேசி களையப்பட்டுள்ளது. ஊடகங்கள் எங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். தொகுதி பங்கீடு குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டது.
எல்லை விவகாரங்களில் பிரதமர் மோடி பச்சை பொய்களை பேசுகிறார். நான் லடாக் சென்று அங்குள்ள மக்களும் பேசினேன். அப்போது இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமித்து இருப்பதை லடாக் மக்கள் என்னிடம் கூறினர். பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் பொய் பேசி வருகிறார். பாஜகவை இந்தியா கூட்டணி தோற்கடிக்கும்.
இரண்டு பெரிய நடவடிக்கைகள் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டன. புரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த ஸ்டேஜ் இந்தியாவின் 60 சதவீத மக்களின் பிரநிதித்துவத்தை காட்டுகிறது. இந்த மேடையில் இருக்கும் கட்சிகள் ஒருங்கிணைந்தால் பாஜகவால் வெற்றி பெற முடியாது.
முதல் கட்டம் ஒருங்கிணைப்பு குழு அமைப்பதும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை விரைவு படுத்துவதும் தான். பாஜகவை வீழ்த்துவதற்கான சக்தி வாய்ந்த நடவடிக்கைகள் இவைகள்தான். பிரதமர் மோடிக்கும் ஒரு குறிப்பிட்ட தொழில் அதிபருக்கும் இடையேயான நெருக்கம் அனைவராலும் பார்க்க முடிகிறது.
ஜி 20 மாநாடு நடைபெற உள்ளது. நமது தேசத்தின் மீதான நம்பகத்தன்மைக்கு அதானி குழுமம் மீது விசாரணைக்கு பிரதமர் மோடி உத்தரவிடுவது அவசியம். ஏழைகளிடம் இருந்து பணத்தை வாங்கி குறிப்பிட்ட சிலருக்கு கொடுப்பதுதான் பிரதமர் மோடியின் அரசாங்கத்தின் திட்டமாக உள்ளது. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.












Click it and Unblock the Notifications