பாஜகவுக்கு எதிராக ஒன்று விடாமல் அனைத்து இடங்களிலும் பொது வேட்பாளர்-“இந்தியா” அணியில் சீரியஸ் விவாதம்
மும்பை: லோக்சபா தேர்தலில் பாஜக போட்டியிடும் அத்தனை தொகுதிகளிலும் பொது வேட்பாளர்களை களமிறக்குவது தொடர்பாக மும்பையில் கூடியிருக்கும் "இந்தியா" அணி தலைவர்கள் தீவிரவமாக விவாதித்து வருகின்றனராம்.
இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் மகாராஷ்டிரா மாநில மும்பையில் நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் 28 கட்சிகளின் 63 தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட 6 மாநிலங்களின் முதல்வர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல். திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், மமக தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மும்பை கூட்டம் தொடர்பாக ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் கூறுகையில், மத்தியில் ஆளும் மோடி அரசானது விவசாயிகள் பிரச்சனை, வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு ஆகியவற்றில் தோல்வியைத் தழுவி இருக்கிறது. இந்தியா கூட்டணி பொது செயல் திட்டத்தை உருவாக்கும். நாட்டின் லோக்சபா தேர்தலில் பாஜக எங்கெல்லாம் போட்டியிடுகிறதோ அங்கெல்லாம் இந்தியா கூட்டணி பொது வேட்பாளர்களை நிறுத்தும் என்றார்.

பீகார் துணை முதல்வரும் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் கூறுகையில், இந்த நாட்டை பிளவுபடுத்துகிற சக்திகளுக்கு இந்தியா கூட்டணியும் நாட்டு மக்களும் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றார். மேலும் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு மாற்றாக வலிமையான கூட்டணியாக "இந்தியா" அணியை மக்கள் பார்க்கின்றனர் என்றார் தேஜஸ்வி யாதவ்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, இளைஞர்கள்தான் தேசத்தின் பலம். இளைஞர்களே தேசத்தின் வலிமை. அதனால்தான் நேரு முதல் மன்மோகன்சிங் வரை அனைவரும் இஸ்ரோ, ஐஐடி என பல நிறுவனங்களை உருவாக்கினர் என்றார்.
ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சந்தா, "இந்தியா" கூட்டணி என்ற பெயரை பயங்கரவாத இயக்கங்களுடன் ஒப்பிட்டு இழிவுபடுத்தினார் பிரதமர் மோடி. அதனை வெறும் வெறுப்பு பேச்சாக மட்டும் பார்க்க வேண்டாம். "இந்தியா" கூட்டணி ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தின் விளைவாகத்தான் பார்க்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications