என் வீட்டைக் கூட விற்றுவிட்டேன்.. எமர்ஜென்சி படம் குறித்து தழுதழுத்த.. நடிகை கங்கனா ரனாவத்
மும்பை: பிரபல பாலிவுட் நடிகையும், பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள எமர்ஜென்சி திரைப்படத்தில் சீக்கியர் சமூகத்தினரை தவறாக சித்தரிக்கும் வகையில் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சையாகிய நிலையில், படத்தை வெளியிட இதுவரை எந்தவித உத்தரவும் கிடைக்காததால் படத்தை வெளியிடுவது குறித்து சென்சார் போர்டு முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத். இவர் தமிழிலும் ஜெயம் ரவியுடன் தாம் தூம், சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. திரைத் துறையில் இருந்து அரசியலுக்குள் நுழைந்த நடிகை கங்கனா ரனாவத் மாண்டி தொகுதியில் பாஜக எம்பியாக உள்ளார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் இமாச்சல பிரதேச மாநிலம், மாண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

நடிகை கங்கனா ரனாவத் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்திய எமர்ஜென்சியை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்துக்கு எமர்ஜென்சி என்றே பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை கங்கனா ரனாவத் இயக்கி, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டிருந்த போது நிகழ்ந்த சம்பவங்கள், அரசியல் நடவடிக்கைகள், இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது நிகழ்ந்த சம்பவங்கள் இப்படத்தில் காட்சியாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இப்படத்தில் சீக்கியர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை வெடித்தது. இந்த திரைப்படம் செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியாகவிருந்தது.
இப்படத்தின் டிரைலர் காட்சிகள் வெளியாகியதைத் தொடர்ந்து பஞ்சாபில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டிரைலர் வெளியாகி உள்ள நிலையில் எமர்ஜென்சி திரைப்படத்துக்கு இதுவரை சென்சார் போர்டில் இருந்து தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இன்னும் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று தணிக்கை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஒவ்வொரு சமூகத்தினரது உணவர்வுகளையும் கருத்தில் கொண்டு செயல்படுவதாக தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.
எமர்ஜென்சி படத்தில் சீக்கியா்களை அவமதிக்கும் வகையில் சில காட்சிகள் உள்ளதால், சீக்கிய அமைப்பினா் தடை விதிக்கக் கோரியுள்ளனா். விவசாயிகள் போராட்டம் குறித்து கங்கனா சா்ச்சைக்குரிய கருத்து கூறியுள்ள நிலையில், அந்தப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய சீக்கிய விவசாயிகளும் அவர் மீது அதிருப்தியில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் பிரச்னைகளால் தணிக்கைக் குழு சான்றிதழ் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. உச்ச நீதிமன்றம் மற்றும் மும்பை உயர் நீதிமன்றத்தில் கங்கனா ரனாவத் மற்றும் தயாரிப்பாளர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், எமர்ஜென்சி படத்தை வெளியிடுவதற்கு இதுவரை எந்தவித உத்தரவும் வழங்கப்படவில்லை.
படம் ரிலீஸ் செய்யப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் கங்கனாவிற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் மும்பையில் உள்ள தனது வீட்டைக்கூட விற்றுவிட்டதாகவும் கங்கனா தரப்பினர் தெரிவித்திருந்தனர். வீட்டை விற்றது குறித்து கங்கனாவும் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். எமர்ஜென்சி படம் வெளியானால் ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் எதிர்மறையான தாக்கம் உண்டாகும் என எண்ணி இப்படத்தை வெளியிட மத்திய அரசு அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்து வருவதாகவும் குற்றாச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.
இதுகுறித்து கங்கனா ரனாவத் அளித்து பேட்டியில், எமர்ஜென்சி படத்தை தயாரித்ததில் பாலிவுட்டில் எனக்கு எந்தவித ஆதரவும் கிடைக்கவில்லை. மற்ற தயாரிப்பாளர்களுடன் இணைந்தே படத்தை தயாரித்துள்ளேன். படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவதால் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, படத்தை வெளியிடுவதில் தணிக்கை குழு முடிவு எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பாலிவுட் மிகவும் அமைதியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல, ஏற்கனவே ஒரு பேட்டியில் பாலிவுட்டில் இருந்து தனக்கு எந்த ஆதரவும் கொடுக்கப்படவில்லை என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications