ஷில்பா ஷெட்டி - கணவர் ராஜ் குந்த்ராவுக்கு லுக்அவுட் நோட்டீஸ்.. ரூ.60 கோடி மோசடி வழக்கில் அதிரடி
மும்பை: தொழிலதிபரிடம் ரூ.60 கோடி மோசடி செய்த வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு எதிராக மும்பை போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இதனால் அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஹிந்தி, தமிழ் உள்பட பல்வேறு மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர்கள் நடிகை ஷில்பா ஷெட்டி. இவரது கணவர் பெயர் ராஜ் குந்த்ரா. தற்போது ஷில்பா ஷெட்டி தனது கணவர் ராஜ் குந்த்ரா உடன் மும்பையில் வசித்து வருகிறார்.

ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கினார். அதன்பிறகு இந்த நிறுவனம் மூடப்பட்டது. தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இந்த நிறுவனம் மூடுவிழா கண்டது.
முன்னதாக இந்த தொழிலுக்காக கடந்த 2015 ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் தொழதிலதிபர் தீபக் கோத்தாரி என்பவரிடம் ரூ.60 கோடி வரை வாங்கி உள்ளனர். தங்களின் தொழிலை விரிவுப்படுத்த உள்ளதாக கூறி பணம் வாங்கி உள்ளனர். ஆனால் நிறுவனம் மூடப்பட்ட நிலையில் அதன்பிறகு அந்த பணத்தை திரும்ப கொடுக்கவில்லை.
அதுமட்டுமின்றி ரூ.60 கோடி பணத்தை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் தொழிலில் முதலீடு செய்யாமல் தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. தீபக் கோத்தாரி பணம் கேட்டபோது ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் பணத்தை தருவதாக கூறியுள்ளனர். ஆனால் சொன்னது போல் பணத்தை அவர்கள் வழங்கவில்லை.
இதுதொடர்பாக தீபக் கோத்தாரி சார்பில் மும்பை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்யப்பட்டது. ஆனால் அந்த புகாரை ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா ஆகியோர் மறுத்தனர். தங்களின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினர்.
இருப்பினும் தொழிலதிபர் தீபக் கோத்தாரியின் புகாரின் பேரில் போலீசார் ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்த்ரா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தான் வழக்கு தொடர்பாக இருவருக்கும் எதிராக போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இதன்மூலம் இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பித்து செல்ல முடியாது. இதனால் ஷில்பா ஷெட்டி அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு எதிரான பிடி இறுகி உள்ளது.












Click it and Unblock the Notifications