வெளியானது தேர்தல் தேதி.. மகாராஷ்டிராவில் எந்த கட்சிக்கு எத்தனை எம்எல்ஏக்கள்? கூட்டணியில் யார் யார்?
மும்பை: ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதியை இன்று மாலை 3.30 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தான் மகாராஷ்டிராவில் கடந்த 5 ஆண்டு அரசியல் நிலவரம் என்ன? தற்போது எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு எம்எல்ஏக்கள் உள்ளனர்? வரும் தேர்தலில் அரசியல் கட்சிகளின் கூட்டணி எப்படி அமையும்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளனர்.
ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்துக்கு கடந்த 2019ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் என்பது நவம்பர் மாதம் 26ம் தேதி முடிவுக்கு வர உள்ளது.

இந்நிலையில் தான் இன்று ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அதன்படி மகாராஷ்டிரா 288 தொகுதிகளில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் என்பது நடைபெற உள்ளது. அதாவது நவம்பர் 20ம் தேதி அந்த மாநிலத்தில் ஓட்டுப்பதிவு என்பது நடைபெற உள்ளது. அதன்பிறகு ஜார்கண்ட் மாநிலத்துடன் சேர்த்து நவம்பர் 23ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் தான் மகாராஷ்டிரா மாநில அரசியல் நிலவரம் பற்றி இங்கே பார்ப்போம். எந்த கட்சி ஆட்சியில் உள்ளது? மகாராஷ்டிராவில் கடந்த 5 ஆண்டுகளில் அரசியல் எப்படி கடந்து வந்தது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
அதாவது மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 145 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். கடந்த 2019ல் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக மற்றும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதேபோல் காங்கிரஸ் கட்சியும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து களமிறங்கின.
இதில் பாஜக 105 தொகுதிகளில் வெற்றி பெற்றது. உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 55 தொகுதிகளில் வென்றது. மொத்தம் இந்த கூட்டணிக்கு 160 தொகுதிகள் கிடைத்தன. அதேபோல் தேசியவாத காங்கிரஸ் க்டசிக்கு 54 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 44 இடங்களும் கிடைத்தது. இந்த கூட்டணிக்கு மொத்தம் 98 தொகுதிகள் கிடைத்தன. அதேபோல் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 2 இடங்களிலும், ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சி ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றது.
இதையடுத்து பாஜக மற்றும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கூட்டணி ஆட்சி அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரிய ட்விஸ்ட் ஏற்பட்டது. உத்தவ் தாக்கரே இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவியை கேட்டார். ஆனால் பாஜக கொடுக்கவில்லை. இதையடுத்து அந்த கூட்டணி முறிந்தது. இதையடுத்து பாஜகவின் காபந்து முதல்வராக இருந்த தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாருடன் சேர்ந்தார். தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக 2019 நவம்பர் 26ம் தேதி இருவரும் ராஜினாமா செய்தனர்.
அதன்பிறகு உத்தவ் தாக்கேரவின் சிவசனோ, காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்தன. மகா விகாஷ் அகடி என பெயரிடப்பட்ட இந்த கூட்டணியின் முதல்வராக உத்தவ் தாக்கரே இருந்தார். இந்த கூட்டணிக்கு மொத்தம் 153 எம்எல்ஏக்களின் ஆதரவு என்பது இருந்தது. இந்த கூட்டணி ஆட்சி இரண்டரை ஆண்டுகள் நடந்தது. அதன்பிறகு இந்த கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி வைக்க எதிர்ப்பு தெரிவித்து சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களுடன் கிளம்பி பாஜகவுடன் கைகோர்த்தார். இதையடுத்து உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதன்பிறகு ஏக்நாத் ஷிண்டே அணியும், பாஜகவும் கோர்த்து கடந்த 2022 ஜூன் மாதம் ஆட்சியை பிடித்தது. இதில் ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார். பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே சிவசனோ 2 ஆக உடைந்த நிலையில் உண்மையான சிவசேனா யார்? என்பதில் வழக்கு தொடரப்பட்டது. எம்எல்ஏக்கள், எம்பிக்கள் அதிகமாக இருப்பதை பொறுத்து உண்மையான சிவசேனா ஏக்நாத் ஷிண்டே தான் என்று கட்சியின் வில்அம்பு சின்னம், பெயர் அவருக்கு வழங்கப்பட்டது. உத்தவ் தாக்கரேவுக்கு இது பெரும் பின்னடைவாக அமைந்தது. இதையடுத்து உத்தவ் தாக்கரே சிவசேனா (யுபிடி) என்று பெயரில் செயல்பட்டு வருகிறது. சின்னமாக தீப்பந்தம் உள்ளது.
அதன்பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. சரத்பவாரின் கட்சியில் இருந்து தனியே சென்ற அஜித் பவார் பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து அஜித் பவார் துணை முதல்வரானார். சரத்பவாரை விட அஜித் பவார் பக்கமே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் அதிகம் உள்ளனர். அதோடு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயர், சின்னம் அஜித் பவாரிடமே உள்ளது. இதனால் கட்சி தொடங்கிய சரத்பவார் பெரிய ஏமாற்றத்தை சந்தித்துள்ளார்.
தற்போது மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு 102, அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ்- 40 மற்றும் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா 38 எம்எல்ஏக்கள் என மொத்தம் 180 பேர் உள்ளனர். மாறாக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து இருக்கும் மகா விகாஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 44, உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவுக்கு 16, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் 12 என மொத்தம் 72 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
இத்தகைய சூழலில் தான் இன்று மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் பாஜக- ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கூட்டணி அமைப்பது உறுதியாகி உள்ளது. ஆனால் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன? என்பது உறுதியாக தெரியவில்லை. ஏனென்றால் அஜித் பவார் தரப்பு சமீபத்தில் அமைந்த மத்திய அமைச்சரவையில் கேபினட் அமைச்சர் பதவியை கேட்டது. ஆனால் பிரதமர் மோடி இணை அமைச்சர் பதவியை தான் வழங்கினார். இதனால் அஜித் பவார் தரப்பு அதிருப்தியில் உள்ளது. இதனால் அவர்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? என்பது பெரிய கேள்வியாக உள்ளது.
அதேபோல் மறுபுறம் வலுவான கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர். அதாவது பாஜக தான் தங்களின் கட்சிகளை 2 ஆக உடைத்ததாக உத்தவ் தாக்கரேவின் சிவசேனா அணி மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் அணிகள் நினைக்கின்றன. இதனால் காங்கிரஸ் கட்சியுடன் மீண்டும் சேர்ந்து பாஜக கூட்டணியை வீழ்த்த அவர்கள் துடிப்புடன் உள்ளனர். காங்கிரஸ் கட்சியும் பாஜகவைக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று உறுதியாக உள்ளது. இதனால் மீண்டும் உத்தவ் தாக்கரே + சரத்பவார் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைவது உறுதியாகி உள்ளது. இதனால் மகாராஷ்டிரா தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications