மகாராஷ்டிரா: முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்ததால் உள்துறை எங்களுக்குதான்.. ஷிண்டே சிவசேனா பிடிவாதம்!
மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்ததால் சிவசேனாவுக்கு உள்துறை இலாகாவை ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சி பிடிவாதம் பிடிப்பதால் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் வரும் 5-ந் தேதி புதிய அரசு பதவியேற்கும் என பாஜக அறிவித்த நிலையில் இடைக்கால முதல்வரும் சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே , உள்துறை உள்ளிட்ட முக்கிய இலாகாக்களை கேட்டு அடம்பிடித்து வருவதால் அரசியல் குழப்பம் தொடருகிறது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய மகாயுதி கூட்டணி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. ஆனால் உடனடியாக மகாயுதி கூட்டணியால் புதிய அரசு அமைக்க முடியவில்லை. முதல்வராக இருந்த ஏக்நாத் ஷிண்டே தமக்கு மீண்டும் முதல்வர் பதவி தரப்பட வேண்டும் என போர்க்கொடி தூக்கினார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலையிட்டு ஏக்நாத் ஷிண்டேவை சமாதானப்படுத்தினார். பின்னர் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவார் ஆகியோர் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு மும்பை திரும்பிய ஏக்நாத் ஷிண்டே, தமக்கு உடல்நலன் சரியில்லை என கூறி சொந்த கிராமத்துக்கு சென்றுவிட்டார். இது தொடர்பாக சிவசேனா வட்டாரங்கள் கூறுகையில், பாஜகவுக்காக முதல்வர் பதவியையே விட்டுத் தந்துள்ளார் ஏக்நாத் ஷிண்டே. துணை முதல்வர் பதவி எங்களுக்கு தரப்படுவதில் பிரச்சனை இல்லை. ஆனால் எந்த துறைகள் எங்களுக்கு ஒதுக்கப்படும் என்பதுதான் முக்கியமானது. துணை முதல்வர் பதவி, உள்துறை இலாகா, சபாநாயகர் பதவி ஆகியவற்றை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என பாஜகவிடம் கேட்டுள்ளோம். இதற்கு மேலும் எங்களால் இறங்கி வர இயலாது என தெரிவித்துள்ளன.
இதனிடையே பாஜக தலைமையிலான புதிய அரசு வரும் 5-ந் தேதி பதவியேற்கும் என அக்கட்சி அறிவித்துள்ளது. இந்த புதிய அரசின் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
மேலும் உள்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை தங்களுக்கு ஒதுக்க பாஜக மறுத்தால் ஆட்சியில் பங்கேற்காமல் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் முடிவை சிவசேனா எடுக்கவும் வாய்ப்பிருக்கிறது என்கின்றன மும்பை அரசியல் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications