நெருங்கும் கிளைமாக்ஸ்- மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ராஜினாமா? சட்டசபை கலைப்புக்கு பரிந்துரை?
மும்பை: மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் 8 சிவசேனா அமைச்சர்கள் பங்கேற்கவில்லை என்கின்றன தகவல்கள். மேலும் அடுத்து என்ன நடக்கும் என பொறுத்திருந்து பாருங்கள் என அமைச்சர்களிடம் முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
Recommended Video
மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சியில் மிகப் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களுடன் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார்.

ஏக்நாத் ஷிண்டேவை சமாதானப்படுத்த சிவசேனா எடுத்த முயற்சிகள் கை கொடுக்கவில்லை. இதனையடுத்து மகாராஷ்டிரா சட்டசபையை கலைக்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி பகிரங்கமாக தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று பிற்பகல் மகாராஷ்டிரா மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அவர் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் தற்போதைய அரசியல் குழப்பம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் 8 சிவசேனா அமைச்சர்கள் பங்கேற்கவில்லை எனவும் கூறப்படுகிறது. அத்துடன் இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் உத்தவ் தாக்கரே, அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்திருக்கிறார்.
இதனிடையே அதிருப்தி கோஷ்டியில் இருந்து 2 சிவசேனா எம்.எல்.ஏக்கள் தப்பி மும்பை திரும்பி இருப்பது புதிய பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
மேலும் தமக்கு 40க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதால் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என அதிருப்தி கோஷ்டி தலைவர் ஏக்நாத் ஷிண்டே கூறி வருகிறார். அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியில் முகாமிட்டுள்ள ஏக்நாத் ஷிண்டே அடுத்த கட்டம் தொடர்பாக ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார்.












Click it and Unblock the Notifications