அதுக்குள்ளவா? இப்பவே அந்த பேச்சு எதுக்கு? அஜித் பவார் கருத்தால் முகம் சுளிக்கும் மகாராஷ்டிரா காங்.
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் லோக்சபா தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து இப்போதே பேச வேண்டும் என்பதில் அரசியல் கட்சிகள் அதீத ஆர்வம் காட்டுகின்றன. மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் இத்தகைய கருத்தை தெரிவித்ததற்கு காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே சிவசேனா- சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கட்சி ஆகியவை இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியின் ஆட்சியைத்தான் பாஜக கவிழ்த்தது. ஆனாலும் 3 கட்சிகளும் கூட்டணியை தொடருவதில் உறுதியாக இருப்பதாக கூறிக் கொள்கின்றன.

உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, காங்கிரஸ் இரண்டும் பாஜகவுடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பே இல்லை. ஆனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியானது பாஜகவை நோக்கி ஒருவித மென்மைப் போக்கையே வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அண்மையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை திடீரென சரத்பவார் சந்தித்தார். அதேபோல பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமான தொழிலதிபர் அதானியை சரத்பவார் சந்தித்தார். தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர் அஜித் பவார் தலைமையில் கணிசமான எம்.எல்.ஏக்கள் கட்சியை உடைத்துக் கொண்டு பாஜகவை ஆதரிக்கலாம் என்கிற பேச்சும் நீண்டகாலமாக உண்டு.
இந்நிலையில் 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என அஜித் பவார் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். லோக்சபா தேர்தலுக்கு இன்னமும் 11 மாதங்கள் இருக்கின்ற நிலையில் அஜித் பவாரின் இந்த கருத்து காங்கிரஸ் தலைவர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது. தேர்தல் நேரத்தில்தான் தொகுதி பங்கீடு குறித்து பேச வேண்டும்.. இப்போதே தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தேவை என்ன உள்ளது என்பது காங்கிரஸ் கட்சியினரின் கேள்வி.
இதேபோலவே பாஜக- ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியிலும் தொகுதிப் பங்கீட்டை முன்வைத்து சர்ச்சை வெடித்தது. ஆனால் ஏக்நாத் ஷிண்டே டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பின் லோக்சபா தேர்தல் உள்ளிட்டவைகள் அனைத்தையும் பாஜகவுடன் இணைந்தே சந்திக்கும் என ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications