இது வெறும் டிரைலர்தான்.. மெயின் பிக்சர் ஜூலையில்தான்.. மக்களுக்கு 'அலர்ட்' கொடுக்கும் மகா. அமைச்சர்
மும்பை: மகாராஷ்டிராவில் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் கொரோனா 3-வது அலை இருக்கக்கூடும் என்றும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கூறி இருக்கிறார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு புயல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. தினமும் புதிய பாதிப்புகள், புதிய உயிரிழப்புகள் உலகளவில் முதலிடம் பிடித்து புதிய உச்சத்தை தொட்டு வருகின்றன.
இந்தியாவில் கொரோனா அதிக பாதிப்புக்கு மிக முக்கிய காரணமாக விளங்குவது மகாராஷ்டிரா மாநிலமாகும்.

மகாராஷ்டிரா முதலிடம்
நாட்டிலேயே தினசரி பாதிப்பு மற்றும் தினசரி உயிரிழப்பில் மகாராஷ்டிராதான் முதலிடம் பிடித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 66,159 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 771 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த மகாராஷ்டிராவில் மே 15-ம் தேதி வரை ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன

3-வது அலை
நிலைமை இப்படி இருக்க ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் மகாராஷ்டிராவில் கொரோனா 3-வது அலை இருக்கும் என்று மாநில அமைச்சர் கூறி இருப்பது ''எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது''போல் அமைந்துள்ளது. இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்களுக்கு எச்சரிக்கை
மகாராஷ்டிராவில் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் கொரோனா தொற்றின் 3-வது அலை கடுமையாக இருக்கும் என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். எனவே மக்கள் பொறுப்புணர்ந்து மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். 3-வது அலைக்குள் போதுமான மருத்துவ ஆக்ஸிஜன் கிடைப்பதன் அடிப்படையில் தொற்றில் இருந்து நாம் மீள முடியும். தொற்று நோய் நிபுணர்கள் கூற்றுப்படி ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் கொரோனா 3-வது அலை இருந்தால் அது நமக்கு பெரும் சவாலாக இருக்கும்.

ரெம்டெசிவர் மருந்து பற்றாக்குறை
ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் ஆலைகளை அமைக்கவும், ஆக்ஸிஜன் செறிவுகளை ஏற்பாடு செய்யவும், சி.டி ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ இயந்திரங்கள் போன்ற மருத்துவ உபகரணங்களை இந்த வசதிகள் இல்லாத மாவட்டங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாநிலத்தின் சில மருத்துவமனைகளில் ரெம்டெசிவர் மருந்து பற்றாக்குறை ஏற்பட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. பற்றாக்குறை இருந்தாலும், மருந்துகளை நியாயமான முறையில் பயன்படுத்துமாறு மருத்துவர்களிடம் கேட்டுள்ளோம் என்று ராஜேஷ் டோப் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications