மாதம் ரூ.100 கோடி... ஊழல் புகாரில் அமைச்சர் மீது சிபிஐ விசாரணை.. அனில் தேஷ்முக் ராஜினாமா
மும்பை: ஊழல் புகாரில் சிபிஐ விசாரணைக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மகாராஷ்டிராவில் உள்ள உத்தவ் தாக்கரே அரசுக்கு தொடர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதலில் சர்வதேச அளவில் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான அம்பானி வீட்டின் அருகில் வெடி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மறுபுறம் கொரோனா பரவலும் அங்குத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு இரவு மற்றும் வார இறுதி நாட்களில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டு
இதற்கு மத்தியில், கடந்த சில வாரங்களுக்கு முன் மும்பை போலாஸ் ஆணையராக இருந்த ஐ.பி.எஸ் அதிகாரி பரம் பிர் சிங் மராட்டிய உள் துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். மும்பையில் இருக்கும் ஹோட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் இருந்து மாதம்தோறும் ரூ.100 கோடி ரூபாய் வசூலித்துத் தர வேண்டும் என்று அனில் தேஷ்முக் போலீசாரை வலியுறுத்தியதாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

நீதிமன்றத்தில் வழக்கு
மேலும், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் சட்டவிரோத டிரான்ஸ்பர் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளையும் அவர் சுமத்தியிருந்தார். இது மகாராஷ்டிரா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை அனில் தேஷ்முக் தொடர்ந்து மறுத்தே வந்தார். இது தொடர்பாக ஜெய ஸ்ரீ பட்டீல் என்பவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சிபிஐ விசாரணை
இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், உள் துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து முதற்கட்ட விசாரணை நடத்துமாறு சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து 15 நாட்களில் முதற்கட்ட விசாரணையை நடத்திக் குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறும் சிபிஐ-க்கு உத்தரவிட்டிருந்தது. அனில் தேஷ்முக் மீது ஏன் இதுவரை எஃப்ஐஆர் பதிவு செய்யவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்றும் தெரிவித்திருந்தது.

அமைச்சர் ராஜினாமா
இந்நிலையில், தார்மீக அடிப்படையில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அனில் தேஷ்முக் அறிவித்துள்ளார். சிபிஐ இது குறித்து தற்போது விசாரணை நடத்துவதால் அனில் தேஷ்முக் இப்போது அமைச்சர் பதவியில் தொடர்ந்தால் சரியாக இருக்காது. எனவே அவர் தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்துள்ளார் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.இந்நிலையில், தார்மீக அடிப்படையில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அனில் தேஷ்முக் அறிவித்துள்ளார். சிபிஐ இது குறித்து தற்போது விசாரணை நடத்துவதால் அனில் தேஷ்முக் இப்போது அமைச்சர் பதவியில் தொடர்ந்தால் சரியாக இருக்காது. எனவே அவர் தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்துள்ளார் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

பாஜக
முன்னதாக அனில் தேஷ்முக் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக தொடர்ந்து வலியுறுத்தியது. இருப்பினும் தான் எந்த தவறையும் செய்யவில்லை என்பதால் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று அனில் தேஷ்முக் கூறியிருந்தார்.