இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து.. பாஜக அரசு எடுத்த முடிவு.. மகாராஷ்டிராவில் என்ன நடந்தது?
மும்பை: மகாராஷ்டிராவில் கல்வியில் இஸ்லாமியர்களுக்குத் தனியாக 5% இட ஒதுக்கீட்டை வழங்கும் அவசரச் சட்டத்தை முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்திருந்தது. இருப்பினும், அது நடுவே சில சட்ட சிக்கல்களை எதிர்கொண்டது. இந்தச் சூழலில் தான் மகாராஷ்டிராவில் இப்போது இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை பாஜக அரசு ரத்து செய்துள்ளது.
இந்தியாவில் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கி இருப்போருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த வரையறையின் கீழ் தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன்படி வேறு சில மாநிலங்களிலும் இஸ்லாமியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

மகாராஷ்டிரா
இதற்கிடையே மகாராஷ்டிர அரசு, தனது மாநிலத்தில் முஸ்லிம்களில் பின்தங்கிய வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 5% இடஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது. சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கிய வகுப்பினர் பிரிவின் கீழ் 'சிறப்புப் பின்தங்கிய பிரிவு-ஏ' ஆக இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த அவசரச் சட்டம் 2014ல் காலாவதியான நிலையில், இட ஒதுக்கீடு எதுவும் வழங்கப்படவில்லை. இருப்பினும், சான்றளிப்பு முறை தொடர்ந்த நிலையில், தற்போது அதையும் மகாராஷ்டிர அரசு ரத்து செய்தது.
2014ஆம் ஆண்டில் அப்போதைய காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அரசு, இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது. அதாவது அரசு வேலைகள், கல்வி ஆகியவற்றில் மராத்தி மக்களுக்கு 16% மற்றும் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீட்டை அறிவித்தது. இதற்காகச் சட்டசபையில் அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
பின்னணி
இருப்பினும், இந்த இரண்டிற்கும் எதிராகவும் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மராத்தா மற்றும் முஸ்லிம் மக்களுக்கான வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டைத் தள்ளுபடி செய்தது. எனினும், முஸ்லிம்களுக்குக் கல்வியில் இடஒதுக்கீடு தேவை என்று சுட்டிக்காட்டியது.
இது தொடர்பாக மும்பை ஐகோர்ட் மேலும் கூறுகையில், "சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்களாக (இஸ்லாமியர்களில் குறிப்பிட்ட பிரிவினர்) வகைப்படுத்தப் போதுமான ஆதாரங்கள் உள்ளன. எனவே, குறிப்பிட்ட முஸ்லிம் சமூகங்களுக்கான இடஒதுக்கீட்டைப் பொறுத்தவரை, 'சிறப்பு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்' எனப் பிரிவில் இட ஒதுக்கீடு வழங்கலாம்" என்றார். அதேநேரம் இந்த இட ஒதுக்கீடு இஸ்லாமியர்களில் அனைத்துப் பிரிவினருக்கும் பொருந்தாது. சுமார் 50 இஸ்லாமியப் பிரிவினருக்கு மட்டுமே பொருந்தும் என்றும் மும்பை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
ஆட்சியை இழந்தது
இதற்கு நடுவே 2014 சட்டசபைத் தேர்தல் முடிந்துவிடவே, காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்து. முந்தை காங்கிரஸ் கூட்டணி அரசு இடஒதுக்கீடு தொடர்பாக அவசரச் சட்டத்தையே கொண்டு வந்த நிலையில், அரசியலமைப்பு காலக்கெடுவுக்குள் அவசரச் சட்டத்தை நிரந்தரச் சட்டமாக மாற்ற பாஜக அரசு தவறிவிட்டது.
ரத்தான இட ஒதுக்கீடு
இதனால், 2014 டிசம்பர் 23ம் தேதி அந்த அவசரச் சட்டம் காலாவதியாகிவிட்டது. இதனால் முஸ்லிம் சமூகத்திற்கான 5% கல்வி இடஒதுக்கீடும் கிடைக்காமல் போனது. அதன் பிறகு மராத்தியர்களுக்கான இடஒதுக்கீட்டை மீட்டெடுக்கச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், முஸ்லிம் ஒதுக்கீட்டைக் கொண்டு வர எந்தவொரு முயற்சியும் நடக்கவில்லை. சான்றளிப்பு முறை மட்டும் தொடர்ந்த நிலையில், தற்போது அதையும் மகாராஷ்டிர அரசு ரத்து செய்தது.
அங்குள்ள எதிர்க்கட்சிகள் இதைத் தொடர்ந்து விமர்சித்தே வந்தன. இந்த நடவடிக்கை "சிறுபான்மையினருக்கு எதிரானது" எனக் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளன. இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications