எங்ககிட்ட 40 எம்.எல்.ஏக்கள்.. நாங்களே ஒரிஜனல் என்சிபி- சின்னமும் எங்களுக்குதான்.. அஜித்பவார்
மும்பை: தமது தலைமையில் 40 எம்.எல்.ஏக்கள் இருப்பதால் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் எங்களுக்குதான் சொந்தம்; கட்சியின் சின்னமும் எங்களுக்குதான் சொந்தம் என்கிறார் மகாராஷ்டிராவில் திடீரென துணை முதல்வரான அஜித் பவார்.
மகாராஷ்டிரா மாநில அரசியலில் திடீர் திருப்பமாக சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டுவிட்டது. அஜித்பவார் தலைமையில் 30 எம்.எல்.ஏக்கள் ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். அத்துடன் மகாராஷ்டிரா புதிய அரசிலும் இணைந்துவிட்டனர். துணை முதல்வராக அஜித் பவார், மூத்த தலைவர்களான சக்கன் புஜ்பால், திலிப் வல்சே பாட்டீல், தனஞ்செய் முண்டே அதிதி தத்காரே உள்ளிட்ட 9 பேரும் அமைச்சர்களாகவும் பதவியேற்றுவிட்டனர். இதனால் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

இதனிடையே மொத்தம் உள்ள 53 எம்.எல்.ஏக்களில் 40 பேர் ஆதரவு தமக்கு இருக்கிறது; ஆகையால் தேசியவாத காங்கிரஸ் கட்சி எங்களுடையது; கட்சியின் சின்னமும் எங்களுடையது; தேசியவாத காங்கிரஸ் கட்சியே நாங்கள்தான் என அஜித்பவார் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா இதேபோல ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 2 ஆக பிளவுபட்டது. ஏக்நாத் ஷிண்டே பக்கம் எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், கவுன்சிலர்கள் திரண்டனர். இதனால் சிவசேனா கட்சி யாருக்கு சொந்தம் என்பதில் சிக்கல் ஏற்பட்டது. வழக்குகள், விசாரணைகளுக்குப் பின்னர் சிவசேனா கட்சி ஏக்நாத் ஷிண்டே வசமானது. தற்போது அதே பாணியில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டுவிட்டது.
பாட்னாவில் அண்மையில் அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சிவசேனா- என்சிபி போல அனைத்து மாச்சரியங்களையும் கைவிட்டுவிட்டு எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என சரத்பவார் பேசியிருந்தார். தற்போது சரத்பவார் கட்சியே இரண்டாக பிளவுபட்டு கட்சியையே அவர் இழக்கும் நிலைமை உருவாகி உள்ளது.
இந்த திடீர் அரசியல் மாற்றம் தொடர்பாக கருத்து தெரிவித்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, இரட்டை என்ஜின் அரசாங்கம் இப்போது 3 என்ஜின்களுடன் செயல்பட உள்ளது. அதாவது ஒரு முதல்வர்; 2 துணை முதல்வர்களுடன் மகாராஷ்டிரா அரசு செயல்பட இருக்கிறது. இதனால் மகாராஷ்டிரா மக்களுக்குதான் நன்மை என்றார்.
அதேநேரத்தில் மகாராஷ்டிராவில் அரசியல் கட்சிகளை அழிப்பதையே பாஜக வேலையாக வைத்திருக்கிறது என உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா விமர்சித்தும் உள்ளது












Click it and Unblock the Notifications