கவிழ்கிறது பாஜக அரசு? மாறி மாறி விமர்சித்து கொள்ளும் முக்கிய தலைவர்கள்.. மகாராஷ்டிராவில் குழப்பம்
மும்பை: மகாராஷ்டிராவில் என்டிஏ கூட்டணியே ஆட்சியில் இருக்கிறது. ஆனாலும், கடந்த சில காலமாகவே அங்கு என்டிஏ கூட்டணிக்குள் பாஜக மற்றும் சிவசேனா இடையே மோதல் வெடித்துள்ளது. பாஜகவை விமர்சித்து ஷிண்டே சில கருத்துகளைக் கூறிய நிலையில், அதற்கு பட்னாவிஸ் இப்போது காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார். இதனால் அங்குப் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இப்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு இரு கட்டங்களாக உள்ளாட்சி நடைபெறும் நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 2ம் தேதி நடைபெறுகிறது. ஆளும் தரப்பு உள்ளாட்சித் தேர்தல்களில் வெல்ல வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. இதற்கான பிரச்சாரம் அங்கு தீவிரமாக நடந்து வருகிறது.

உள்ளாட்சி தேர்தல்
அதன்படி பல்கர் மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் சிவசேனா தலைவரும் துணை முதல்வரும் ஏக்நாத் ஷிண்டே கலந்து கொண்டார். அந்த பிரச்சாரத்தில் அவர் சொன்ன சில கருத்துகளே இப்போது விவாதமாக மாறியுள்ளது.
ஏனென்றால் சிவசேனாவை பொறுத்தவரை இப்போது அவர்கள் பாஜகவினர் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். உள்ளூர் பாஜக தலைவர்கள் சிலர் சிவசேனா நிர்வாகிகளை தங்கள் கட்சிக்கு இழுப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறார்கள். இதன் காரணமாகவே இரு தரப்பிற்கும் இடையே பூசல் நிலவுகிறது. இந்தச் சூழலில் தான் பிரச்சார கூட்டத்தில் பேசிய ஷிண்டே பாஜகவை மறைமுகமாக விமர்சித்துப் பேசியிருந்தார்.
சர்ச்சை கருத்து
அங்கு பேசிய அவர், "அகந்தை தான் ராவணனை அழித்தது.. அவரது அகம்பாவம் தான் அழகான இலங்கையை எரித்து சாம்பலாக்கியது" என்று அவர் குறிப்பிட்டார். ஷிண்டே தனது பேச்சில் யாரையும் நேரடியாகக் குறிப்பிடவில்லை. இருந்த போதிலும், அவர் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தான் சொல்கிறார் என்றே பரவலாகச் சொல்லப்பட்டது. இதனால் பாஜகவினர் அதிருப்தி அடைந்தனர்.
பதிலடி
இந்தச் சூழலில் தான் பட்னாவிஸும் ஷிண்டேவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதே தஹானுவில் மறுநாள் நடந்த பாஜக பிரச்சார கூட்டத்தில் பேசிய பட்னாவிஸ், "இலங்கையை நாங்கள் எரிப்போம் என்று யார் சொன்னார்கள்? நாங்கள் இலங்கையில் வாழவில்லை.. நாங்கள் ராமர் பக்தர்கள். ராமரின் பக்தர்களால் எப்படி இலங்கையில் இருக்க முடியும்? தேர்தல் பிரச்சாரங்களில் பொதுவாக இதுபோல தேவையில்லாமல் பேசவே செய்வார்கள். ஆனால், பாஜக மட்டுமே ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரே கட்சி" என்று அவர் தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் முதற்கட்டமாக சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. மாநில அளவில் பாஜகவும் சிவசேனாவும் கூட்டணியில் இருந்தாலும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்தே போட்டியிடுகிறது. இதனால் பாஜகவுக்கு சிக்கல் உருவாகியுள்ளது. அதிலும் இந்த குறிப்பிட்ட தஹானுவில் பாஜகவுக்கு எதிராக சிவசேனாவும் அஜித் பவாரின் என்சிபி கட்சியும் கைகோர்த்துள்ளது. இது பாஜகவுக்கு சிக்கலை அதிகரிப்பதாகவே இருக்கிறது.
தனித்து போட்டி
இந்தளவுக்கு கூட்டணியில் விரிசல் நிலவும் நிலையில், இதே நிலை தொடர்ந்தால் ஆட்சிக்கே கூட பிரச்சினை வரலாம் என அஞ்சப்படுகிறது. முன்னதாக தனது கட்சி நிர்வாகிகளை பாஜக தனது பக்கம் இழுப்பது குறித்து ஷிண்டே நேரடியாகவே டெல்லிக்குச் சென்று அமித் ஷாவிடம் முறையிட்டிருந்தார். இருப்பினும், அமித் ஷா எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காததே ஷிண்டே அதிருப்திக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில், அதன் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications