மகாராஷ்டிரா: 95 தொகுதிகளில் பதிவான, எண்ணப்பட்ட வாக்குகளில் பெரும் வித்தியாசம்..உத்தவ் சிவசேனா பகீர்!
மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் 95 தொகுதிகளில் பதிவான வாக்குகள் மற்றும் எண்ணப்பட்ட வாக்குகளில் மிகப் பெரும் வித்தியாசம் இருப்பதாக உத்தவ் தாக்கரே சிவசேனா பகீர் குற்றச்சாட்டை கிளப்பி இருக்கிறது. மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் குறித்த தேர்தல் ஆணையத்தின் மாறுபட்ட அறிவிப்புகள் ஏற்கனவே சர்ச்சையை கிளப்பிய நிலையில் 95 தொகுதிகளின் வாக்குகள் குறித்தும் சந்தேகம் கிளம்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 230 தொகுதிகளைக் கைப்பற்றியது. இது மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கட்சிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மகாராஷ்டிராவில் மகாயுதி மற்றும் மகா விகாஸ் அகாடி கூட்டணிகளிடையே கடும் போட்டிதான் இருக்கிறது என கூறப்பட்ட நிலையில் திடீரென பாஜக கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் வாக்கு பதிவு சதவீதம் குறித்த இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புகள் சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது; வாக்குப் பதிவு நாளில் மாலை 5 அணிக்கு அறிவித்த வாக்குப் பதிவு சதவீதத்துக்கும் மறுநாள் வெளியிட்ட புள்ளி விவரங்களுக்கும் மிகப் பெரிய வேறுபாடு இருப்பது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது என முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி கூறியிருந்தார்.
இந்த நிலையில் உத்தவ் தாக்கரே சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், பாஜக கூட்டணி 230 இடங்களில் வெற்றி பெற்றது என்பது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களால் கிடைத்த பம்பர் பரிசுதான். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஹேக் செய்துவிட முடியும் என எல்லோரும் கூறுகின்றனர். தற்போதைய சட்டசபை தேர்தலில் 95 தொகுதிகளில் பதிவானதாக கூறப்படும் வாக்குகள், எண்ணப்பட்டதாக கூறப்படும் வாக்குகளுக்கு இடையே மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது என்கிற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இதனிடையே மின்னணு வாக்குப் பதிவு இயந்திர முறையை கைவிட்டு மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கே திரும்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி கையெழுத்து இயக்கம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.
மேலும் மகாராஷ்டிரா சட்டசபையின் பதவி காலம் நேற்று முன்தினமே முடிவடைந்துவிட்டது; இன்னமும் புதிய ஆட்சி அமையவில்லை; ஆகையால் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று உத்தவ் தாக்கரே சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் வலியுறுத்தி உள்ளார்.











Click it and Unblock the Notifications