சிவசேனாவில் விழுந்த விக்கெட்.. எம்பி பதவியை ராஜினாமா செய்த ஹேமந்த் பாட்டில்.. பரபர பின்னணி
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் எம்பியான ஹேமந்த் பாட்டீல் திடீரென்று தனது எம்பி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதோடு, அதற்கான கடிதத்தை லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு அனுப்பி பரபரப்பை கிளப்பி உள்ளார்.
மகாராஷ்டிராவில் தற்போது பாஜக மற்றும் சிவசேனாவின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிசும் உள்ளனர்.

2019 சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தார். இரண்டரை ஆண்டு ஆட்சிக்கு பிறகு கடந்த ஆண்டு இந்த ஆட்சி கலைந்தது.
சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலானவர்கள் பாஜகவுடன் கோர்த்து ஆட்சியை பிடித்தனர். தற்போது சிவசேனா கட்சியின் பெயர், சின்னம் அனைத்தும் ஏக்நாத் ஷிண்டேவிடம் தான் உள்ளது. இப்படி 2 ஆக பிரிந்த சிவசேனாவில் ஏக்நாத் ஷிண்டேவுடன் இருப்பவர் தான் ஹேமந்த் பாட்டீல் எம்பி. இவர் மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக இருக்கிறார்.
இந்நிலையில் தான் இன்று அவர் தனது எம்பி பதவியை திடீரென்று ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பான கடிதத்தை அவர் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த சம்பவம் தற்போது மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவரது எம்பி பதவி ராஜினாமாவுக்கு பின்னணி என்ன? என்பது பற்றிய விபரமும் வெளியாகி உள்ளது.
அதாவது மகாராஷ்டிராவில் மாரத்தா சமூகத்தினர் பூர்வகுடிகளாக உள்ளனர். இவர்கள் கல்வி, விவசாயம் உள்பட பல துறைகளிலும் முன்னிலையில் உள்ளனர். மேலும் அரசியலிலும் இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் செல்வாக்கு பெற்றவர்களாக உள்ளனர். 10க்கும் அதிகமான மகாராஷ்டிரா முதல்வர்கள் இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களாக தான் உள்ளனர்.
இந்நிலையில் தான் விவசாயம் உள்பட தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் சமூக, கல்வி ரீதியாக பின் தங்கி வருவதாக அவர்கள் தற்போது கூறி வருகின்றனர். இதனால் சமூக கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்பினராக (Socially and Educationally Backward - SEBC) தங்களை அறிவிக்க வேண்டும். அதோடு கல்வி, வேலைவாய்ப்பில் தங்களுக்கு 16 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறினர்.
இந்த இடஒதுக்கீட்டை வழங்க கடந்த 2018-ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் சட்ட பிரச்சனைகளால் இது செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால் மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினர் தங்களுக்கு இட ஒதுக்கீடு கோரி பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதும் அங்கு தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தான் சிவசேனா கட்சியின் ஹேமந்த் பட்டீல் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்வதாக கூறி லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications